பக்கம் எண் :

364.

    எண்ணார்புரம் எரித்தார்அருள் எய்தும்திரு நெடுமால்
    நண்ணாததோர் அடிநீழலில் நண்ணும்படி பண்ணும்
    பண்ணார்மொழி மலையாள்அருள் பாலா பனிரண்டு
    கண்ணாவெம தண்ணாவெனக் கனநீறணிந் திடிலே.

உரை:

     பண்ணிசை போல மொழிகின்ற மலைமகளான உமாதேவியின் பாலா, பன்னிரண்டு கைகளை யுடையவனே, எமது தலைவனே என்று சொல்லிப் பெருமை பொருந்திய திருநீற்றை அணிந்து கொண்டால் பகையசுரரின் புரம் மூன்றையும் எரித்த சிவபிரானுடைய திருவருளை இனிது பெறலாம்; திருவையுடைய நெடிய திருமாலும் அடைந்தறியாத அடிநீழலை யடையும் படி அது செய்யும், எ. று.

     உமாதேவியின் பேசும் மொழி பண்ணிசை போலும் ஒலி நலமுடைய தென்றற்குப் “பண்ணார் மொழி” யென்றும், மலையரசன் மகளாதல் விளங்க, “மலையாள்” என்றும், அவட்கு முருகன் புதல்வனாதல் பற்றிப் “பாலா” என்றும் பரவுமாறு கூறுகின்றார். அண்ணன் - தலைவன். கனம் - பெருமை. திரிபுரத்தசுரர்கள் சிவனுக்குப் பகையாயினமையின், “எண்ணார்” எனவும், அவர்கள் தலைநகரத்துக் காவலா யமைந்த மதில்கள் மூன்றையும் எரித்துச் சாம்பராக்கின சிவபெருமானது வெற்றிச் செயலைப் “புரமெரித்தான்” எனவும், சிவஞானச் செயல்களாற் பெறற்குரிய திருவருளை எளிதின் பெறலாம் என்பார், “அருள்” எனவும் உரைக்கின்றார். திருமகளைத் தன்மார்பகத்தே யுடையனாதல் பற்றித் “திருநெடுமால்” என்று உரைக்கின்றார். மக்களாயினார் தனது திருவடியை யடையும் பெருமை படைத்த திருமாலும் திருநீறணிந்தார் திருவடியை வணங்கி வாழ்த்துவன் என்று திருநீற்றின் சிறப்பை விளம்புதற்கு, “நெடுமால் நண்ணாததோர் அடி நீழலில் நண்ணும்படி பண்ணும்” என இயம்புகின்றார்.

     இதனால் மலையாள் பாலா, பன்னிரு கண்ணா என்பன முதலாய சொற்களைச் சொல்லித் திருநீறணிவார் பெறும் சிறப்பைத் தெரிவித்தவாறாம்.

     (10)