பக்கம் எண் :

3642.

     போதுதான் விணே போக்கிப்
          புலையனேன் புரிந்த பொல்லாத்
     தீதுதான் பொறுத்த உன்றன்
          திருவருட் பெருமைக் கந்தோ
     ஏதுதான் புரிவேன் ஓகோ
          என்என்று புகழ்வேன் ஞான
     மாதுதான் இடங்கொண் டோங்க
          வயங்குமா மன்று ளானே.

உரை:

     ஞான மடந்தையாகிய உமாதேவி இடப்பாகத்தே பொருந்தி விளங்கச் சிறக்கின்ற பெரிய ஞான சபையின் எழுந்தருளுகின்ற பெருமானே, காலத்தை வீணாக்கிப் புலைத்தன்மையை யுடைய யான் செய்துள்ள பொல்லாத தீய குற்றங்களைப் பொறுத்தருளி உனது திருவருள் ஞானத்தை வழங்கிய பெருந்தன்மைக்கு ஐயோ, யான் யாது கைம்மாறு புரிவேன்; உன்னை என்னென்று புகழ்வேன். எ.று.

     ஞானமே யுருவாகிய செல்வியாதலின் உமாதேவியை, “ஞான மாது” என நவில்கின்றார். சிவனது திருமேனியில் இடப்பாகத்தைத் தனக்குரிய இடமாகக் கொண்டவளாதலின், அவளால் விளக்கமுறும் அந்த நலத்தை “ஞான மாது இடங் கொண்டு ஓங்க” என்று சிறப்பிக்கின்றார். உலகியல் மணி விளக்கமும் சிவஞானப் பேரொளியும் விளங்குவது பற்றித் தில்லையிலுள்ள ஞான சபையை, “மயங்கும் மாமணி மன்று” என்று போற்றுகின்றார். இழந்தால் பெறற் கில்லாத காலத்தின் அருமையை யுணராது பயனின்றிக் கழிய விடுவது குற்றமும் வீண்செயலும் ஆதலின், “போதுதான் வீணே போக்கி” என்றும் அதனினும் புலைத்தன்மை வேறின்மையின், “புலையனேன்” என்றும், நன்று செய்தலின்றிப் பொறுத்தற் குரிய குற்றங்களைச் செய்தமை தோன்ற, “புரிந்த பொல்லாத் தீதுதான் பொறுத்த” என்றும், பொறுத்தற் கரிய குற்றங்களைப் பொறுத்தருளிய சிவபிரானுடைய பெருந்தன்மையை வியந்து, “உன்றன் திருவருட் பெருமை” என்றும் உரைக்கின்றார். தான் புரிந்த குற்றங்களைப் பொறுத் தருளியதோடு மேல் அவற்றை யுணர்ந்து செய்யா வண்ணம் சிவஞானம் நல்கிய பற்றி, “உன்றன் திருவருட் பெருமைக்கு” என்றும், அது தானும் பிறிதொரு கைம்மாற்றால் நிறைவு செய்யும் தன்மைத்தன்று என்பது பற்றி, “ஏதுதான் புரிவேன், ஓகோ என்னென்று புகழ்வேன்” என்றும் வருந்துகிறார்.

     இதனால், கைம்மாறு செய்தற்கு ஆகாத திருவருள் நலத்தை வியந்துரைத்தவாறாம்.

     (2)