3644. மையரி நெடுங்க ணார்தம்
வாழ்க்கையின் மயங்கி இங்கே
பொய்யறி வுடையேன் செய்த
புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய்
ஐயறி வுடையார் போற்றும்
அம்பலத் தரசே நின்சீர்
மெய்யறி வறியேன் எந்த
விளைவறிந் துரைப்பேன் அந்தோ.
உரை: மெய் முதலிய கருவிகள் ஐந்தாலும், மனத்தாலும் நிறைந்த அறிவுடையவர்கள் போற்றிப் பாராட்டுகின்ற அம்பலத்தருளரசே; மை தீட்டிய செவ்வரி, பரந்த நெடிய, கண்களையுடைய மகளிரோடு கூடி வாழும் வாழ்க்கையில் அறிவு மயங்கி இவ்வுலகில் பொய் யறிவுடையவனாய் நான் செய்த குற்றங்கள் அனைத்தையும் பொறுத் தருளி, ஞானம் வழங்கி, எளியேனை ஆட்கொண் டருளினாய்; மெய்யுணர்வு இல்லாத நான் எவ்வகைப் பயனை யறிந்து உன்னைப் புகழ்வேன். எ.று.
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து கருவிகளும் அவற்றால் பெறப்படும் பொருள்களின் உண்மை யுணரும் மனமும் உண்மை ஞானப் பேற்றுக்கு வாயில்களாதலின், அவற்றால் மெய்யுணர்வு எய்திய சான்றோர்களை, “ஐயறிவு உடையோர்” என்று சிறப்பிக்கின்றார். அந்த உண்மை ஞானிகளால் போற்றப் படுவது பற்றித் தில்லைப் பொன்னம்பலத்துள் எழுந்தருளும் கூத்தப் பெருமானை, “ஐயறிவு உடையோர் போற்றும் அம்பலத் தரசே” என்று பாராட்டுகின்றார். மை தீட்டுதலும் செவ்வரி பரத்தலும் நீண்ட கண்களும் இளமகளிர்க்கு அழகு தருவனவாதலின் அவர்களை, “மையரி நெடுங்கணார்” எனப் புகழ்கின்றார். அவர்களோடு கூடி யுறையும் வாழ்வு உலகியல் இன்பத்தில் மயங்கி ஆள்வித்தலின், “நெடுங்கணார்தம் வாழ்க்கையின் மயங்கி” என்றும், அம்மயக்கத்தால் உண்மை யறிவும் பொய்ப் படுதலால், “பொய் யறிவுடையேன்” என்றும் புகல்கின்றார் - புன்மை குற்றம். குற்றத்தைப் பொறுத்தலோடு மீளவும் செய்யாவகை ஞானம் நல்குதலின், “புன்மைகள் பொறுத் தாட்கொண்டாய்” என்று கூறுகின்றார். பயனறிந்து செய்யும் செய்வினை மெய்யறி வுடையோர்க் கன்றி இயலாதாகலின், “மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன்” என விளம்புகின்றார்.
இதனால், மெய்யறிவின்மை கூறிக் கைம்மாறு மாட்டாமை விளக்கியவாறாம். (4)
|