3645. பேயினும் பெரியேன் செய்த
பிழைகளுக் கெல்லை இல்லை
ஆயினும் பொறுத்தாட் கொண்டாய்
அம்பலத் தரசே என்றன்
தாயினும் இனிய உன்றன்
தண்அருட் பெருமை தன்னை
நாயினுங் கடையேன் எந்த
நலமறிந் துரைப்பேன் அந்தோ.
உரை: பேயினும் மிக்கவனாகிய யான் செய்த குற்றங்களுக்கு எல்லை யில்லையாயினும் அவற்றை யெல்லாம் பொறுத்து, என்னையும் ஆட்கொண்டு அருள் ஞானம் வழங்கிய அம்பலத்தரசே, என்னைப் பெற்றெடுத்த தாயினும் இனியனாகிய உனது தண்ணிய அருட் பெருமையை எண்ணி, நாயினும் கடைப்பட்ட யான் எவ்வெந் நலங்களை எடுத்துக் கூறுவேன்; அந்தோ, ஒன்றும் தெரிந்திலதே. எ.று.
துன்பம் செய்வனவற்றின் மிக்கது பேய் என்பது பற்றிப் “பேயினும் பெரியேன்” எனத் தம்மைப் பழிக்கின்றார். பெருமை - மிகுதி பற்றியது. பேய்த் தன்மை மிக்கவர் செய்யும் கொடுமைகள் எண்ணிறந்தனவாதல் தோன்ற, “செய்த பிழைகளுக் கெல்லை யில்லை” எனவும், எல்லை யில்லாத பிழைகள் பொறுக்கும் அளவின வல்லவாயினும் அவற்றையும் பொறுத்தாண்ட நலத்தை, “ஆயினும் பொறுத்து ஆட்கொண்டாய்” எனவும் இயம்புகின்றார். இறைவனது திருவருள் நலம், பெற்ற தாயின் பேரருளினும் பெரிதாய்ப் பிறங்குதலால், “தாயினும் இனிய வுன்றன் தண்ணருட் பெருமை” என்றும், அதனால் விளைந்த நலங்களைத் தெரிந்தெடுத்துப் பாராட்டுவதும் ஒருவகைக் கைம்மாறாதலின், “எந்த நலமறிந்துரைப்பேன்” என்றும் கூறுகின்றார். உரைக்க மாட்டாமைக்குக் காரணம் தம்முடைய அறிவு செயல்களின் சிறுமை என்பார், “நாயினும் கடையேன்” என நவில்கின்றார்.
இதனால், அருணலம் அறிந்து கூற மாட்டாமை தெரிவித்தவாறாம். (5)
|