|
3647. வரைகடந் தடியேன் செய்த
வன்பிழை பொறுத்தாட் கொண்டாய்
திரைகடந் தண்ட பிண்டத்
திசைஎலாம் கடந்தே அப்பால்
கரைகடந் தோங்கும் உன்றன்
கருணையங் கடற்சீர் உள்ளம்
உரைகடந் ததுஎன் றால்யான்
உணர்வதென் உரைப்ப தென்னே.
உரை: அற வரம்பு கடந்து கீழ்மகனாகிய யான் செய்த வன்மையான பிழைகளைப் பொறுத்துக் கொண்டு என்னையும் திருவடிக் குரியனாகச் செய்தருளினாய்; கடல்களின் எல்லை கடந்து அப்பாலுள்ள அண்டங்கள் அவற்றிலுள்ள பிண்டங்கள் ஆகியவை இருக்கின்ற திசைகளைக் கடந்து, அவற்றின் எல்லையையும் கடந்து மிக்குயர்கின்ற கருணைக் கடலாகிய உனது பெருமை மக்கள், தேவர் முதலியோர்களின் மன மொழிகளைக் கடந்தது எனச் சான்றோரால் கூறப்படுகிற தென்றால் யான் என் மனத்தால் உணர்வதும், வாயால் உரைப்பதும் எவ்வாறாகும். எ.று.
வரை - அறநூல் வகுத்த வரம்பு. வரம்பு கடந்து செய்யும் பிழைகள் பொறுத்தற் காகாதனவாதலால், “வரை கடந்து அடியேன் செய்த வன்பிழை” என வுரைக்கின்றார். அடியேன் - ஈண்டுக் கீழ்ப்பட்டவன் என்னும் பொருளது. திரை - ஆகு பெயராற் கடல் குறித்து நிற்கிறது. கரை - எல்லை. கருணையங் கடல் - கருணை நிறைந்த அழகிய கடல். பரம் பொருள் வாக்கு மனாதீதம் எனப்படுவது பற்றி “உள்ளம் உரை கடந்தது” என்று கூறுகின்றார். மனவுணர்வுள்ளும் பல வாக்குக் கெட்டாமையின், மனத்துக்கும் மொழிக்கும் எட்டாதது நினைந்தும் கூறவும் மாட்டாமை விளங்க, “யான் உணர்வ தென் உரைப்ப தென்னே” என வுரைக்கின்றார்.
இதனால், இறைவன் புகழ் மன வாக்குகட்கு எட்டாதென இயம்பியவாறாம். (7)
|