பக்கம் எண் :

3649.

     வன்செயல் பொறுத்தாட் கொண்ட
          வள்ளலே அடிய னேன்றன்
     முன்செயல் அவைக ளோடு
          முடுகுபின் செயல்கள் எல்லாம்
     என்செயல் ஆகக் காணேன்
          எனைக்கலந் தொன்றாய் நின்றோய்
     நின்செயல் ஆகக் கண்டேன்
          கண்டபின் நிகழ்த்தல் என்னே.

உரை:

     வன்செயல்களைச் செய்த விடத்தும் அன்பர்களைப் பொறுத்தாட்கொண்ட அருள் வள்ளலே, அடியவனாகிய யான் முன்னே செய்த வினைகளோடு பின் தொடர்ந்த வினைகள் அனைத்தையும் என் செயல்களாக நினைக்கின்றே னில்லை; என் உயிர்க் குயிராய்க் கலந்து ஒன்றி நிற்பவனாதலின் யாவற்றையும் நின் செயல்களாகவே காண்கின்றேன்; அதனால் நான் வேறே சொல்லுவது என்னையோ. எ.று.

     பொறுத்தற் கரிய செயல் என்றற்கு வன்செயல் என்கின்றார். வன்செயல் புரிந்த தொண்டர் பலரை இறைவன் பொறுத்தாண்ட வரலாறுகளை “திருத்தொண்டர் புராணம்” உரைப்பது காண்க. அத்தகைய பேரருளாளனாகிய நீ என் னுயிரிற் கலந்து ஒன்றாய் உடனாய் இருக்கின்றாயாதலால் முன்னும் பின்னும் செய்த என்னுடைய வினை வகைகளை என் செயலாக உணர்கின்றே னில்லை என்பார், “செயல்கள் எல்லாம் என் செயலாகக் காணேன்” என்றும், ஒன்றி யுடனாதல் பற்றி “என் மனமொழி மெய்களால் விளையும் செயல்கள் அனைத்தும் நின் செயலாகக் கண்டேன்” என்றும் உரைக்கின்றார். தன்னுடைய கருவி கரணங்கள் எல்லாம் சிவ கரணங்களாக விளங்குதல் கண்டார்க்குத் தன்வினை என வேறு காண்டற்கு இன்மை பற்றி, “கண்ட பின் நிகழ்த்தல் என்னே” என மொழிகின்றார்.

     இதனால், தம்முடைய கருவி கரணங்கள் சிவ கரணங்களாகக் காணப்பட்டமை தெரிவித்தவாறாம்.

     (9)