3650. இருமையும் ஒருமை தன்னில்
ஈந்தனை எந்தாய் உன்றன்
பெருமைஎன் என்று நான்தான்
பேசுவேன் பேதம் இன்றி
உரிமையால் யானும்நீயும்
ஒன்றெனக் கலந்து கொண்ட
ஒருமையை நினைக்கின் றேன்என்
உள்ளகந் தழைக்கின் றேனே.
உரை: இம்மை மறுமையில் பெறலாகும் நலன்களை இவ்வொரு பிறப்பிலேயே எனக்குக் கொடுத் தருளினாய் ஆதலால் உனது திருவருட் பெருமையை நான் என்னென்று சொல்வேன்; நான் வேறு நீ வேறு என்ற வேறுபாடற்ற உரிமை பற்றி ஆன்மாவாகிய யானும் சிவமாகிய நீயும் ஓரினமாம் எனக் கலந்து கொண்ட ஒருமைத் தன்மையை நினைத்து உள்ளம் தழைக்கின்றேன். எ.று.
இம்மை மறுமையில் பெறலாகும் இன்பங்களை இம்மைப் பிறப்பால் உடலாலும், மறுமை இன்பங்களை ஞான நாட்டத்தாலும் பெற்று மகிழ்கின்றமை தோன்ற, “இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய்” என்றும், இவ்வாறு அளித்த பெருமையை வியந்து பாராட்டுகின்றாராதலின், “உன்றன் பெருமை என்னென்று நான்தான் பேசுவேன்” என்றும் உரைக்கின்றார். சிவன், சீவன் என்ற இரண்டும் சித்தாந்தத் தன்மையால் ஒத்த உரிமை யுடையவை எனப் பெரியோர் கூறுவது பற்றி, “பேத மின்றி உரிமையால் யானும் நீயும் ஒன்று” என்றும், சீவன் சிவமாம் தன்மை யுற்றவிடத்துச் சிவமேயாய்ச் சிவபோகம் நுகரக் கிடக்கும் ஒருமை இயல்பை நினைந்து உள்ளத்தால் உவகை மிகுகின்றாராதலால், “ஒன்றெனக் கலந்து கொண்ட ஒருமையை நினைக்கின்றேன் என் உள்ளகம் தழைக்கின்றேன்” என்றும் தெரிவிக்கின்றார்.
இதனால், சிவபோக வொருமை நிலையை எண்ணி இன்புற்று உரைத்தவாறாம். (10)
|