3652. என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே
இதயத்தி லேதயவிலே
என்உயிரி லேஎன்றன் உயிரினுக் குயிரிலே
என்இயற் குணம் அதனிலே
இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே
என்செவிப் புலன்இசையிலே
என்இருகண் மணியிலே என்கண்மணி ஒளியிலே
என்அனு பவந்தன்னிலே
தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே
தானே கலந்துமுழுதும்
தன்மயம தாக்கியே தித்தித்து மேன்மேல்
ததும்பிநிறை கின்றஅமுதே
துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத
சுகமே சுகாதீதமே
சுத்தசிவ சன்மார்க்க நிதிநே அருட்பெருஞ்
சோதிநட ராசபதியே.
உரை: எனக்கென இயன்ற உடம்பிலும் எலும்பிலும், எனது அன்பிலும் இதயத்திலும், எனது இரக்கப் பண்பிலும் என்னுயிரிலும், என்னுடைய உயிர்க்குயிராகிய அதனிலும், என்பால் இயன்ற குணத்திலும், இனிய இயல்பாகிய என் வாக்கிலும், என்னுடைய நாக்கிலும், என் செவியில் புலனாகும் இசையிலும், என்னுடைய இரண்டு கண்களிலும் அமைந்த மணிகளிலும், மணியில் அமைந்த ஒளியிலும், எனது அனுபவத்திலும், தன்னில் இயன்ற எனது அறிவிலும், அறிவுக் கறிவிலும் தானாகக் கலந்து முழுதும் தன்மயமாக்கித் தித்தித்து மேன்மேலும் ததும்பி வழிகின்ற அமுதமே; நெருங்கிய பெரிய கருணை வெள்ளமே; அழியாத சுகப் பொருளே; அந்தச் சுகத்திற்கும் அத்தமாகிய மெய்ப் பொருளே, சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட்பெருஞ்சோதியாகிய நடராசபதியே வணக்கம். எ.று.
உலகில் உயிரோடு கூடி வாழ்தற் கென அமைந்த உடம்பாதலின், “என் இயல் உடம்பு” என்றும், அவ்வுடம்பிற்கு உருவும் உறுதியும் தருவது பற்றி, “என்பு” என்றும் கூறுகின்றார். என்பு தோல் போர்த்த உடம்பைப் பண்பும் பயனும் உடையதாக்குவது அன்பாதலின், “அன்பில் என்றும், அது நின்று நிலவும் இடமாதலின் “இதயத்தில்” என்றும், அவ்வன்பு உருவாய்ச் செயல்படும் பண்பைத் “தயவு” என்றும் உரைக்கின்றார். உடம்பின் இயக்கத்திற் கேதுவாய் இலங்குவது பற்றி, “என் உயிரில்” என்றும், உணர்வுடைமை விளங்க நிலவுவது பற்றி, “உயிரினுக்கு உயிர்” என்றும், உயிரும் உணர்வும் சிறப்புற நிற்பது பற்றி, “என் இயற்குணம்” என்றும் இயம்புகின்றார். இனிது இயலும் தன்மைத் தாதலால், வாக்கையும் வாக்கிற்குச் சிறப்புக் கருவியாகிய நாக்கையும் அடுத்தடுத்து உரைக்கின்றார். உயிர்ப் பண்பை வளர்க்கும் மாண்புடையது பற்றி இசை யுணர்வை “என் செவிப் புலன் இசையிலே” என இயம்புகின்றார். ஒவ்வொரு கண்ணிலும் இருத்தல் பற்றி, “என் இரு கண்மணியிலும்” என்றும், மணிக்கு ஒளி இயல்பாதலான் “என் கண்மணி ஒளியிலே” என்றும், உடம்பு முதல் கண் ஈறாகக் கூறிய கருவிகளால் எய்தப்படுவது பற்றி, “என் அனுபவம் தன்னிலே” என்றும், அந்த அனுபவ ஞானத்தை நுகர்தற் கியன்ற கருவியாதலின் “தன்னியல் என் அறிவிலே அறிவினுக்கு அறிவிலே” என்றும் உரைக்கின்றார். அறிவு முழுதும் அது நின்ற உடல் கருவி கரணங்கள் முழுதும் எல்லாவற்றிலும் கலந்து தன் தன்மையதாக்கி, இனிய தேனூறி மேலும் மேலும் நிறைந்து வழிகின்ற ஞானாமிர்தமாதலின், “தானே கலந்து முழுதும் தன்மயமாக்கியே தித்தித்து மேன் மேல் ததும்பி நிறைந்த அமுதே” என்றும், தனது சிறுமையை நோக்காது பெரிய அருள் வெள்ளமாய் வந்து பொருந்தினமையின், “துன்னிய பெருங் கருணை வெள்ளமே” என்றும், என்றும் குன்றாத சுகப் பொருளாய்ந் திகழ்கின்றமையின், “அழியாத சுகமே” என்றும், அந்தச் சுகநிலைக்கும் மேலாய சுகம் ஒன்று உண்டு போலும் என உணர நிற்றலின், “சுகாதீதமே” என்றும் சொல்லுகின்றார். சுகாதீதம் தானும் அருட் பெருஞ் சோதி மயமாய் நடராச மூர்த்தமாய் விளங்குவது பற்றி, “அருட் பெருஞ் சோதி நடராச பதியே” எனப் போற்றுகின்றார். (2)
|