பக்கம் எண் :

3653.

     உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம்
          உள்ளஎன லாங்கலந்தே
     ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும்
          உதயாத்த மானம்இன்றி
     இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய்
          ஏகமாய் ஏகபோக
     இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே
          இலங்கிநிறை கின்றசுடரே
     கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம்
          சுகன்எலாம் கண்டபரமே
     காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன்
          கண்காண வந்தபொருளே
     தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்ப்
          துணையாய் விளங்கும்அறிவே
     சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
          சோதிநட ராசபதியே.

உரை:

     எனது உடல், உயிர், உள்ளம், உணர்வு முதலாக வுள்ள கருவி கரணங்கள் எல்லாவற்றிலும் கலந்து, ஒளி மயமாக்கி அவற்றிடையே கலந்து நின்ற இருளையும் போக்கி எக்காலத்தும் தோற்றக் கேடுகளின்றி விளங்குகின்ற எல்லாம் வல்ல அருட் சத்தியாகிய கிரணங்களே திருவுருவாய் ஏகமாய்த் தனிநிலை போகமாகிய இன்பநிலை எனப்படும் ஒப்பற்ற ஞானசபையின் நடுவிலே விளக்கமுறுகின்ற ஞான வான்சுடரே; கடல், நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய எல்லாவற்றையும் உருவாகப் படைத்தளித்த பரம்பொருளே; சாத்திரங்கள் எல்லாம் காண முடியாத பொருள் என்று சொல்லவும், எளியேனாகிய என்கண் காண வந்தருளுகின்ற மெய்ப்பொருளே; அனுபவித்தற் குரிய எல்லாவற்றையும் யான் எளிதில் பெற எனக்கு உள்ளும் புறமும் கலந்து மெய்யான துணையாய் விளங்குகின்ற மெய்யறிவே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட்பெருஞ் சோதியாகிய நடராசபதியே வணக்கம். எ.று.

     தனது உடல் கருவிகள் அனைத்தும் பசுகரணங்களாய் நின்ற தன்மை மாறிப் பதிஞானப் பேற்றிற் குரிய ஞானவொளி கலந்து, இருள் நீங்கிப் பதிகரணங்களாக மாறி விளங்க வல்ல தாக்குவது சிவசத்தியாதலின், அவ்வருட் சத்தியின் ஒளிக் கதிர்களே திருமேனியாக நிற்பது விளங்க, “உடல் எலாம் உயிர் எலாம் உளம் எலாம் உணர்வெலாம் உள்ளன வெலாம் கலந்தே ஒளி மயமதாக்கி இருள் நீக்கி எக்காலத்தும் உதயாத்த மானமின்றி இடமெலாம் வல்ல சிவசத்தி கிரனாங்கியாய் என்று கூறுகின்றார். சிவசத்தி கிரணாங்கியாய் என்றதனால் கிரணங்களே அங்கமாகக் கொண்ட சிவம் வேறெனக் கொள்ளற்கு இல்லை என்பது புலப்பட, “ஏகமாய்” என இயம்புகின்றார். ஞான சபை, பேரின்ப ஞான நிலையமாதல் பற்றி, “ஏகபோக இன்ப நிலை” என்றும், “ஒரு சிற்சபை” என்றும் உவந்து மொழிகின்றார். நில முதல் வான் ஈறாக உள்ள உலகனைத்தையும் படைத்த பரம்பொருளாய் அவற்றின் மேலாய் விளங்குதல் பற்றி, “கடலெலாம் புவியெலாம் கனலெலாம் வளியெலாம் ககனெலாம் கண்ட பரமே” என உரைக்கின்றார். கனல் - நெருப்பு. ககன் - வானம். இது ககனம் எனவும் வழங்கும். எல்லாச் சாத்திரங்களும் கண் முதலிய பொறிகளால் காணப்படாத பொருள் எனக் கூறினும் எளியனாகிய என்னுடைய கட் பொறி காண வந்தருளினாய் என்பாராய், “காணாத பொருள் எனக் கலையெலாம் புகல என் கண் காண வந்த பொருளே” என இயம்புகின்றார். பொருள்களை இட்டும் தொட்டும் பெற வருவது அனுபவ ஞானமாதலால், “தொடலெலாம் பெற” எனச் சுட்டி யுரைக்கின்றார். உடலுக்கு உள்ளும் புறமும் உணர்வு மயமாய் அறிவன அறிதற்கும் உறுவன அறிவித்தற்கும் துணை புரிதலின் திருவருள் ஞானத்தை, “உள்ளும் புறத்தும் மெய்த் துணையாய் விளங்கும் அறிவே” எனக் கூறுகின்றார். நடராசப் பெருமானே அருட் பெருஞ் சோதியாகவும், சிவ சன்மார்க்க நிதியாகவும் விளங்குவது பற்றி, “சிவ சன்மார்க்க நிதியே, அருட்பெருஞ் சோதி நடராச பதியே” எனக் கூறுகின்றார்.

     இதனால், பசுகரணங்களைப் பதிகரணங்களாக்கிச் சிவபோக வாழ்வு பெறுவிக்கும் அருட் சத்தி வடிவே நடராச பதியின் திருமூர்த்தமாகும் எனத் தெரிவித்தவாறாம்.

     (3)