3655. எண்ணிலா அண்டபகிர் அண்டத்தின் முதலிலே
இடையிலே கடையிலேமேல்
ஏற்றத்தி லேஅவையுள் ஊற்றத்தி லேதிரண்
டெய்துவடி வந்தன்னிலே
கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே
கருவிலே தன்மைதனிலே
கலையாதி நிலையிலே சத்திசத் தாகிக்
கலந்தோங்கு கின்றபொருளே
தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச்
சேர்ந்தனு பவித்தசுகமே
சித்தெலாஞ் செயவல்ல தெய்வமே என்மனத்
திருமாளி கைத்தீபமே
துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே
சுதந்தரித் தொளிசெய்ஒளியே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராசபதியே.
உரை: எண்ணி லடங்காத அண்டங்கள் அவற்றிற்கு வெளியண்டங்கள் ஆகியவற்றின் முதலிலும் இடையிலும் கடையிலும் மேற்புறத்தும், அவற்றின் உள்ளகத்தும் திரண்டு தோன்றுகின்ற வடிவுகளிலும் கண்ணுக்குப் புலப்படாத அருவத்திலும் உருவத்திலும் பருப்பொருளிலும் நுண்ணிய கருப்பொருளிலும், அப்பொருள்களின் தன்மைகளிலும், நிவிர்த்தி முதலிய கலை நிலைகளிலும், அவ்வவற்றின் சத்தியாகியும் சத்துப் பொரு ளாகியும் கலந்து நிறைந்து ஓங்குகின்ற முதற் பொருளே; கோடைக் காலத்தில் தெளிந்த சந்திரகாந்தக் கல்லாலாகிய மணி மேடையின்கண் பொருந்தி அனுபவிக்க வருகின்ற சுக வடிவமே; அணிமா முதலிய பலவகைச் சித்துக்களையும் செய்ய வல்ல தெய்வமே; என் மனமாகிய அழகிய மாளிகையின்கண் ஒளிர்கின்ற விளக்கமே; நெருங்குதற் கரிய சாந்த குணவான்களாகிய சிவஞான கிரியின் உள்ளத்தில் உரிமை யோடு எழுந்தருளி ஞானவொளி செய்கின்ற ஒளிப்பொருளே; சுத்த சிவ சன்மார்க் கத்திற் கென அமைந்த செல்வமே; திருவருளாகிய பெரிய ஒளியையுடைய நடராசப் பெருமானே வணக்கம். எ.று.
அண்டங்கள் எண்ணிறந்தனவாதலால், “எண்ணிலா அண்டம்” என்றும், அவற்றிற்கு மேலாய் நிறைந்துள்ள வெளி அண்டங்களைப் பகிரண்டம் என்றும் நூலோர் கூறுவர். இந்த அண்டங்கள் ஒவ்வொன்றிலும் முதல், இடை, கடை யென்ற எப்பகுதியிலும் மேற்புறம், உட்புறம் என்ற எத்திறத்திலும் திரண்டு உருவாய்த் தோன்றுகின்ற பொருள்களைக் காட்டுதற்கு, “முதலிலே இடையிலே கடையிலே மேலேற்றத்திலே உள்ளூற்றத்திலேதிரண்ட வடிவங்கள்” எனக் குறிக்கின்றார். அண்டங்களின் மேற்புறத்தை மேலேற்றம் என்றும், உள்ளே செறிந்திருக்கும் பொருட்களை உள்ளூற்றம் என்றும் கூறுகின்றார். உள்ளே உறுவது உள்ளூற்றம் எனப்படுகிறது. உறுவது ஊற்றம் என அறிக. உள்ளிருந்து ஊறும் நீரை ஊற்று என்பது போல. அருவப் பொருள் கண்ணுக்குப் புலப்படாமை பற்றி, “கண்ணுறா அருவம்” என்றும், கட்புலனாவதை “உருவம்” என்றும், பருப்பொருளைக் “குரு” என்றும், நுண்பொருளைக் “கரு” என்றும் கூறுகின்றார். உருவும் அருவுமாகிய பொருள்கள் எல்லாவற்றிற்கும் தனித் தன்மை என்பது ஒன்று உண்டாதலின் அதனை வேறு நிறுத்தி, “தன்மை தனிலே” என்றும், நிவிர்த்தி, பிரதிட்சை, வித்தை, சாந்தி, அதீதை என நிலவும் கலை நிலைகளைக் “கலையாத நிலைகள்” என்றும், அவற்றுள் அமைந்த பொருள்களின் சத்தியும் சத்துப் பொருளுமாகிய எல்லாக் கூறுகளையும் எண்ணி யுரைத்தலின், “சத்தி சத்தாகி” என்றும், அண்டம் முதலாக இச்சத்தி சத்து ஈறாக எடுத்தோதிய கூறுகள் எல்லாவற்றிலும் கலந்து அவற்றினுள்ளே ஒடுங்கி ஒழியாது மேன்மேலும் ஓங்கிப் பரத்தல் பற்றி, “கலந்து ஓங்குகின்ற பொருளே” எனக் கூறுகின்றார். நிலாக் காந்த மணி - சந்திர காந்தக் கல் என்றும் வழங்குவதாகும். சந்திர காந்தத்தின் ஒளி தெளிந்த பால் போன்ற நிலவொளியாதல் பற்றி, “தெண்ணிலாக் காந்த மணி” எனச் சிறப்பிக்கப்படுகிறது. சந்திர காந்தக் கல்லையும் மணி வகையுள் ஒன்றாகக் கருதுமாறு தோன்ற, “காந்த மணி” என்றும் அந்த மணியால் அமைக்கப்பட்ட மேடையை, “நிலாக் காந்த மணி மேடை” என்றும் விளக்குகின்றார். கடுமையான கோடைக் காலத்தில் இந்தச் சந்திர காந்த மணி மேடை மேலிருப்பது மிக்க பெரும் சுகானுபவமாதலால், “தெண்ணிலாக் காந்த மணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்து அனுபவித்த சுகமே” என்று சிவானந்தத்தைச் சிறப்பிக்கின்றார். அணிமா மகிமா முதலாகக் கூறப்படும் அட்டமா சித்திகளையும் எளிதில் செய்ய வல்ல தெய்வமே” என்று போற்றுகின்றார். சிவானுபவம் மனத்தின்கண் தங்கிப் பெருஞானப் பேரொளிப் பிறங்க விளங்குவதால், “என் மனத் திருமாளிகைத் தீபமே” என்று தெரிவிக்கின்றார். துன்னுதல் - துண்ணுதல் என வந்தது. துண்ணுதல் என்றே கொண்டு துணுக்குறுதல் எனப் பொருள் கொள்ளினும் பொருந்தும். சாந்தமே வடிவாகிய சிவஞானிகள் உள்ளத்தைத் தனக்குரிய இடமாகக் கொள்பவனாதலால் சிவபெருமானை, “சாந்த சிவஞானிகள் உளத்தே சுதந்தரித்து ஒளி செய் ஒளியே” என்று துதிக்கின்றார். திருவருளாகிய “பேரொளிக் கதிர்களைப் பரப்பும் ஞானவொளிப் பொருளாதல் தோன்ற, அருட் பெருஞ் சோதி நடராச பதியே” எனப் பராவுகின்றார்.
இதனால், அண்டம் முதல் கலையாதி நிலைகளில் சத்தியும் சத்துமாய்க் கலந்து சுகானுபவமாய், எல்லாம் செய்ய வல்ல தெய்வமாய், மன மாளிகைத் தீபமாய், சிவஞானிகளின் உள்ளத்தில் ஒளிரும் ஒளியாய், சன்மார்க்க நிதியாய், அருட்பெருஞ் சோதியாகிய நடராசப் பெருமான் விளங்குகின்றான் என்பதாம். (5)
|