3656. அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே
அம்மண்ட லந்தன்னிலே
அகத்தி லேபுவியின் அகிலத்தி லேஅவைக்
கானவடி வாதிதனிலே
விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட
விளங்கும்அவை அவையாகியே
மேலும்அவை அவையாகி அவைஅவைஅ லாததொரு
மெய்ந்நிலையும் ஆனபொருளே
தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத்
தலத்திலுற வைத்தஅரசே
சாகாத வித்தைக் கிலக்கண இலக்கியம்
தானாய்இ ருந்தபரமே.
தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச்
சுகமும்ஒன் றாசிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராசபதியே.
உரை: அழகிய நிலவுலகத்திலும், அதன் அடிமுடிகளிலும், அந்த நில மண்டலத்திலும், அதன் அகலத்திலும், அதன் எல்லாமாய்த் திரண்ட நிலையிலும், அதன் கூறுகளாகிய அவ்வவற்றிற்கான வடிவுகளிலும், உருவும் ஒளியும் மிக்குற நிறைந்து அவை யுருவாய் நிகழ்ந்திட விளக்குவதாகிய அவ்வச் சத்தியாகியும், அவற்றின் மேலும் நிறையும் அருட் சத்தியாகியும், அவை யல்லாத மெய்ம்மை சான்ற பொருளாகியும் விளங்குகின்ற பரம்பொருளே; என்னை யோகத் தூண் மேல் ஏற்றி என்னுள் அமுத தாரையைப் பொழிந்து அழிவில்லாத ஞான நிலத்தில் இருக்க வைத்த அருளரசே; சாகாத விந்தைக்கு இலக்கணமும் இலக்கியமுமாய் இருந்தருளுகின்ற பரம்பொருளே; தொம்பதம், தற்பதம், அசிபதம் ஆகிய மூன்றையும் உணர வுளதாகும் உணர்வும் சுகமும் ஒன்றாக விளங்குகின்ற சிவபெருமானே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே, அருட்பெருஞ் சோதியாகிய நடராச மூர்த்தியே வணக்கம். எ.று.
அம்புவி - அழகிய நிலவுலகம். நிலம் முதலிய பூதங்களோடு கூடித் திரண்டு வட்டமாய் விளங்குதலின் நிலவுலகை “மண்டலம்” என்கின்றார். இந்த மண்டலத்தின் சகலப் பொருள்களும் அடங்கப் “புவியின் அகிலம்” எனக் குறிக்கின்றார். அகிலத்தின் ஒவ்வொரு கூறும் தனக்கென வடிவம், குணம், செயல் ஆகியவற்றை யுடையதாதலால், “அவைக்கான வடிவாதி தனிலே” என வுரைக்கின்றார். ஒவ்வொன்றும் ஒளியும் உருவும் பெற்றுப் பொருளாய்த் தோன்றச் செய்வது பற்றி, “விம்பம் உறவே நிறைந்து ஆங்கு அவை நிகழ்ந்திட விளக்கும் அவையவையாகி” என விளம்புகின்றார். ஒளி பெறச் செய்வதும் உரு அமையப் பண்ணுவதும் தனித்தனி வேறு வேறு சத்திகளாதலின், “அவை அவையாகி” என்றும், “மேலும் அவை யவையாகி” என்றும் அறிவிக்கின்றார். அவை அவையாகும் பரம்பொருள், அவையே யாகாது வேறாதலும் உண்மையின், “அவை அவையலாத தொரு மெய்ந்நிலையும் ஆன பொருளே” என மொழிகின்றார். யோக முயற்சியின் அசைவிலாத் தன்மை பற்றி அதனைத் “தம்பம்” என உருவகம் செய்கின்றார். யோக முடிவில் பெறப்படும் யோக ஞானாமிர்தத்தையுண்டு நிலைபெறும் யோக பூமியில் இருப்பித் தருளிய நலம் புலப்பட, “தம்ப மிசை எனை யேற்றி அமுதூற்றி யழியாத் தலத்திலுற வைத்த அரசே” என்று உரைக்கின்றார். சாகாத வித்தை என்பது சாகாக் கலை என்றும் வழங்கும். கலை வகை எல்லாவற்றிலும் தலையாவது பற்றிச் சாகா தலை யென்பதும் ஒன்று. இறந்து படுதற்குரிய உடம்பொடு கூடி நின்றே சாவா மூவாப் பெருஞான உடம்பு பெறுதல் இதன் கொள்கையாகும். சாகா வரம் பெறலாம் எனக் குணக நமச்சிவாய சுவாமிகள் முதலியோர் குறித்திருக்கின்றார்கள். ஆயினும், இதன் வழி முறைகளை யாவரும் நூல் வடிவில் இயம்பிற்றிலராதலால், “சாகாத வித்தைக் கிலக்கிய இலக்கணம் தானா யிருந்த பரமே” என மொழிகின்றார். வேதாந்த ஞான உபதேசம் செய்வோர் மாணாக்கர்க்குத் தத்துவ மசி என்னும் மகா வாக்கியத்தை உபதேசிப்பர் அது தற்பதம், தொம்பதம், அசிபதம் என மூன்றாகப் பிரிந்து தற்பதம் பிரமப் பொருளையும், தொம்பதம் ஆன்மாவையும் குறிப்பதாகக் கொண்டு தற்பதத்தால் குறிக்கப்படும் பரம்பொருள் தொம்பதமாகிய நீ ஆகிறாய் என்ற பொருளில் அசிபதம் வழங்கப்படுகிறது. நீ பிரமப் பொருளாகிறாய் என்ற கருத்துப்பட இதனைத் ‘தத்துவமசி’ என்றும், இதனை ‘மகா வாக்கியம்’ என்றும் அறிஞர் கூறுவர். நான் பிரமப் பொருளாகுவேன் என்று தியானிக்க உளதாகும் பிரம ஞான சுகம் சிவானந்தமாதலின், “தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும் ஒன்றான சிவமே” என உரைக்கின்றார். உயிர்களிலும் உயிரில் பொருள்களிலும் கலந்து நின்றொளிரும் திருவருட் சோதியின் வேறுபடுத்தித் திருவருட் சோதியின் தனிநிலைப் பெருந்தன்மை இனிது புலப்பட, “அருட்பெருஞ்சோதி நடராச பதியே” என அறிவிக்கின்றார். (6)
|