3658. ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா
ஒளியிலே சுடரிலேமேல்
ஓட்டிலே சூட்டிலே உள்ளாடும் ஆட்டிலே
உறும்ஆதி அந்தத்திலே
தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம்
செயவல்ல செய்கைதனிலே
சித்தாய் வினங்கிஉப சித்தாய சத்திகள்
சிறக்கவளர் கின்றஒளியே
வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத
வானமே ஞானமயமே
மணியேஎன் இருகண்ணுள் மணியேஎன் உயிரேஎன்
வாழ்வேஎன் வாழ்க்கைவைப்பே
துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச்
சுகம்எனக் கீந்ததுணையே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராசபதியே.
உரை: ஒட்பமுடைய நெருப்பிலும், அதன் சுவையிலும், ஒப்பற்ற ஒளியிலும், நெருப்பிடத்தே யெழுகின்ற சுடரிலும், மேல் வானத்தில் மின்னற் கொடியாய் ஓடுகின்ற ஓட்டத்திலும், அது செய்யும் வெப்பத்திலும், சுவாலையாய் உள் நின்றாடும் ஆட்டத்திலும், அதனுடைய தோற்றக்கேட்டிலும், தெளியப் புலனாகும் பல்வேறு நிற வுருவிலும், அருவத்திலும் கலந்து எல்லாம் செய்ய வல்ல நெருப்பில் நின்று சித்துப் பொருளாய் விளங்கியும் உபசித்துக்களாகிய சத்திகளில் மேம்பட்டு வளர்கின்ற பரவொளிப் பொருளே; வளவிய சிவ போகமாகிய மலை போல்பவனே; சுகாதீதமான வானமே; ஞான மயமாகிய பெருமானே; மாணிக்க மணி போல்பவனே; என்னுடைய இரண்டு கண்களிலும் விளங்குகின்ற மணி போல்பவனே; எனக்கு உயிரே; என் வாழ்வே; என் வாழ்வுக்குரிய இடமான பொருளே; துள்ளித் திரிகின்ற மனமாகிய பேயை உள்ளத்திலே அடக்கி நிலைத்த சுகத்தை எனக்களித்த துணைவனே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட் பெருஞ் சோதியாகிய நடராசப் பெருமானே வணக்கம். எ.று.
ஒட்பம் உடைமை பற்றி நெருப்பை, “ஒள்ளிய நெருப்பு” என்கின்றார். நெருப்பின் வெப்பத்தால் பொருள்களின் சுவை மேம்படுவது பற்றி, “உப்பிலே” என வுரைக்கின்றார். நெருப்பிடத் தெழும் ஒளிக்கு ஒப்பில்லாமையால் “ஒப்பிலா ஒளியிலே” என்று உரைக்கின்றார். வானத்து மின்னற் கொடியாய் மேகங்களின் ஊடேஓடுவது பற்றி, “மேல் ஓட்டிலே” என மொழிகின்றார். ஓட்டம் “ஓட்டு” எனப்படுகிறது. நெருப்பு எரியுமிடத்து அதன்கண் எழும் சுவாலையின் தோற்றம், நடு, முடிவு ஆகிய இடங்களில் அசைவு தோன்றுதலால், “உள்ளாடும் ஆட்டிலேயுறும் ஆதி அந்தத்திலே” என்று உரைக்கின்றார். இவை யாவும் நெருப்பு நிகழும் இடமென அறிக. தெளிவாகப் புலனாதல் பற்றி நெருப்பின் நிறத்தைத் தெள்ளிய நிறம் எனத் தெரிவிக்கின்றார். கடையப்படாத கட்டையின்கண் நெருப்பு அருவமாய் இருத்தலின், “அருவத்திலே” எனக் குறிக்கின்றார். மூங்கிலும் பிறவும் ஒன்றோடொன்று இணையுமிடத்து அருவாய் நின்ற நெருப்பு உருவாய் வெளிப்படுதலைக் காண்க. நெருப்பைக் கொண்டு எல்லாச் செயல் வகையும் நடைபெறுவதால் நெருப்பின் அத்தன்மையை “எல்லாம் செய வல்ல செய்கை” எனச் சிறப்பிக்கின்றார் சித்து எனப்படும் ஞானமும், ஞான அக்கினியாய்த் திகழ்வதால், “சித்தாய் விளங்கி” என்றும், பல்வேறு சத்திகளை யுடைமை பற்றி, “உப சித்தாய சத்திகள் என்றும் நவில்கின்றார். இக்கூறிய பல்வேறு சித்துக்களையும் உபசித்தாய சத்திகளையும் நெருப்பிடத்து எழுப்பி வளர்த்தல் பற்றிச் சிவ பரம்பொருளை, “சித்தாய் விளங்கி உபசித்தாய சத்திகள் சிறக்க வளர்கின்ற ஒளியே” என்று கூறுகின்றார். வளம் மிக்கது என்றற்கு, “வள்ளிய சிவானந்த மலையே” என்றும், உடல் கருவி கரணங்களைக் கொண்டு பெறுகின்ற சுகபோகங்களுக்கு மேலானதாகலின், “சுகாதீத வானமே” எனவும், ஞான மூர்த்தம் என்றற்கு “ஞான மயமே” எனவும் நவில்கின்றார். ஆன்மாக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து சிவபோகம் பெறுதற்குரிய இடமாதல் விளங்க, “என் வாழ்க்கை வைப்பே” என வழங்குகிறார். பொறி ஐந்தின் வாயிலாக ஆசை வயப்பட்டு அலைவது பற்றி மனத்தை “துள்ளிய மனப் பேய்” என்று சொல்லுகின்றார். மனம் அடங்கினாலன்றி ஞானப் பேறு எய்தாமை பற்றி, “உள்ளுற அடக்கி மெய்ச் சுகம் எனக்கு ஈந்த துணையே” என்று சொல்லுகின்றார்.
இதனால், நெருப்பின்கண் பெறலாகும் ஒட்பும் ஒளியும் பிறவுமாகிய செய்கைகளில் சித்தாய் விளங்கியும், உபசித்தாய சத்திகளாய்ச் சிறந்தும் ஓங்குகின்ற ஒளியும், சிவானந்த மலையும், சுவாதீத வானமும், ஞான மயமும் பிறவுமாய் மெய்ச்சுகம் தந்தான் சிவ பரம்பொருள் என்பதாம். (8)
|