பக்கம் எண் :

3683.

    துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான்
            சோர்ந்தொரு புறம்படுத்துத்
        தூங்குதரு ணத்தென்றன் அருகிலுற் றன்பினால்
            தூயதிரு வாய்மலர்ந்தே
    இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே
            இருகைமலர் கொண்டுதூக்கி
        என்றனை எடுத்தணைத் தாங்குமற் றோரிடத்
            தியலுற இருத்திமகிழ்வாய்
    வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி
            வைத்தநின் தயவைஅந்தோ
        வள்ளலே உள்ளுதொறும் உள்ளக மெலாம்இன்ப
            வாரிஅமு தூறிஊறித்
    துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச்
            சுகவண்ணம் என்புகலுவேன்
        துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
            சோதிநட ராசகுருவே.

உரை:

     வருத்தமுற்ற மனத்துடன் எண்ணற் காகாத எண்ணமெல்லாம் எண்ணிச் சோர்வுற்று ஒருபுறத்தே தூங்கும் காலத்தில், எனதருகில் வந்து தூய மலர் போலும் வாயைத் திறந்து அன்பு மொழி சில பகர்ந்து முகத்திலே இன்பம் தேக்க, புன்னகை தவழத் தமது மலர் போன்ற இரண்டு கைகளாலும் என்னைத் தூக்கி யெடுத்து மார்பிலணைத்து வேறொரு இடத்தில் என்னைப் பொருந்த அமர்த்தி, மகிழ்ச்சியுடன் மெல்லிய பெருங் கருணையாகிய அமுதளித்து, மனக்கவலையைப் போக்கி இன்புறுத்திய உனது பேரருளை நினைத்தல் தோறும், வள்ளற் பெருமானே! என் உள்ளமெல்லாம் இன்பப் பெருக்கு நிறைந்து ஞானவமுதம் ஊறிப் பெருகித் துன்ப மெல்லாம் நீங்க மேன்மேலும் பொங்கித் ததும்பும் சுகானுபவத்தை என்னென்று சொல்லுவேன்; துரியக் காட்சியில் நடுநின்று தோன்றுகின்ற பரம் பொருளே; அருட் சோதியாகிய நடராச குருபரனே வணக்கம். எ.று.

     மனத்துள் துன்பம் நிறைகின்ற போது பொருந்தாத எண்ணங்கள் பல தோன்றிச் சோர்வுபடச் செய்வது இயற்கையாதலால், “துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணி நான் சோர்ந்தொரு புறம் படுத்துத் தூங்கு தருணத்து” என்றும், அருகில் வந்து அன்பு மொழி பகர்ந்த திறத்தை, “அருகிலுற்று அன்பினால் தூய திருவாய் மலர்ந்தும்” என்றும், சொல் வழங்குமிடத்து முகத்திலே இன்பமும் வாயிலே புன்முறுவலும் பொங்கி நின்றதன் இயல்பை, “இன்புறு முகத்திலேபுன்னகை ததும்பவே” என்றும், படுத்துக் கிடந்த தன்னை இரு கை கொண்டு தூக்கி யெடுத்து மார்போ டணைத்து வேறொரு இடத்து இருப்பித்த செய்தியை, “இருகை மலர் கொண்டு தூக்கி என்றனை எடுத்தணைத் தாங்கு மற்றோ ரிடத் தியலுற இருத்தி மகிழ்வாய்” என்றும் அருள் செய்த திறத்தைப் “பெருங் கருணை அமுதளித்திடர் நீக்கி வைத்த நின் தயவை” என்றும் உரைக்கின்றார். கருணைக்கு மென்மைத் தன்மை இயல்பாதலால், “வன்பறு பெருங் கருணை” எனச் சிறப்பிக்கின்றார். வன்பு - அன்புக்கு மறுதலையாய வன்மைத் தன்மை. பெரியோர் செய்த பெருங் கருணையை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சில் இன்ப அமுதூறி மகிழ்ச்சி விளைவிக்குமாதலின் அந்த இயல்பு புலப்பட, “தயவை வள்ளலே உள்ளுதொறும் உள்ளகமெலாம் இன்ப வாரி அமுதூறி ஊறித் துன்பமற மேற்கொண்டு பொங்கித் ததும்புமிச் சுக வண்ணம் என்புகலுவேன்” என்று புகலுகின்றார்.

     இதனால், கவலை மிகுதியால் எண்ணாதன எண்ணிச் சோர்ந்து படுத்திருந்த காலத்து, குருபரன் எழுந்தருளி அன்பு செய்து அருள் நல்கிய திறம் எடுத்துரைத்தவாறாம்.

     (33)