பக்கம் எண் :

23. சற்குருமணி மாலை

    அஃதாவது, நடராசப் பெருமானே தமக்குச் சற்குருவாக எழுந்தருளித் திருவருள் ஞானம் நல்கி யருளினான் என்ற கருத்தால் அப்பெருமானைச் சொன்மாலை தொடுத்து வழிபடுவதாம். இதன்கண், சாகாத தலை, வேகாத கால், போகாத புனல் என்பனவற்றைக் குறிப்பிடுகின்றார். அன்றியும், “அருட் பெருஞ் சோதியை உனக் களித்தனம்; அது கொண்டு துஞ்சிய மாந்தரை எழுப்பிச் சன்மார்க்கத்தில் செலுத்துக” வெனக் குருபரன் உபதேசித்ததும் பிறவும் உரைக்கப்படுகின்றன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3685.

     மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே
          மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே
     கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
          கோயில் இருந்த குணப்பெருங் குன்றே
     வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே
          விச்சையில் வல்லவர் மெச்சுவி ருந்தே
     சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய்
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     மாற்றுக் காணப்படாத செழுமையான பசும் பொன்னானவனே; மாணிக்கம் போலும் நிறமுடையவனே; தீச்சுடரின் அழகிய கொழுந்து போல்பவனே; சாதலறியாத பெரிய தவச் செல்வர்களின் திருவுள்ளத்தில் கோயில் கொண்டருளுகின்ற பெரிய குணக்குன்றமே; வேறொன் றில்லாத சிற்றம்பலத்தில் எழுந்தருளுகின்ற சிவக்கனியே; வித்தியா ஞானத்தில் மிக்கவர்கள் பாராட்டுகின்ற புதுமைப் பொருளே; பாடுத லறியாத என் பாட்டையும் கேட்டு மகிழ்ந்தவனே; ஒப்பற்ற நடராசனாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.

     பிற உலோகப் பொருட்கள் தன்னிற் கலந்து கொள்ளும் இயல்புடையதாதலின், அதன் தூய்மை காண்டற்குச் செய்யும் முயற்சி மாற்றுக் காண்டல் என்பதாம். மாற்றுக் காண முடியாத தூய செம்பொன் என்றற்கு, “மாற்றறியாத செழும் பசும்பொன்” என்று சொல்லுகின்றார். பொன்னை உரை கல்லில் தேய்த்துக் காண்பது போலக் காண முடியாமை பற்றிச் சிவனது திருமேனி நிறத்தை, “மாற்றறியாத செழும் பசும்பொன்” எனப் பாராட்டுகின்றார். மாணிக்க மணி சிவந்த நிறத்தை யுடையதாதலின், அதனை ஒப்பது பற்றிச் சிவனை, “மாணிக்கமே” என்று மொழிகின்றார். அழல் வண்ணன் எனச் சிவனைச் சான்றோர் பாராட்டுவதுண்மையின், “சுடர் வண்ணக் கொழுந்தே” என்று சொல்லுகின்றார். சாகாத நிலை பெற்ற பெரிய தவச் செல்வர்களைக் “கூற்றறியாத பெருந்தவர்” என்று கூறுகின்றார். தவத்தால் கலந்த பெரியோர்களின் திருவுளத்தைத் தனக்குக் கோயிலாகக் கொள்பவன் என்பது பற்றி, “பெருந்தவர் உள்ளக் கோயில் இருந்த குணப் பெருங்குன்றே” எனக் குறிக்கின்றார். பெருமையும் சலியாமையும் சிண்மையும் உடைமை பற்றி, “குணப் பெருங் குன்றே” என்று கூறுகின்றார். சிற்றம்பலத்தின் வேறு அம்பலம் இல்லாமை பற்றி, “வேற்றறியாத சிற்றம்பலக் கனியே” என விளம்புகின்றார். வேறு அறியாத என்பது “வேற்றறியாத” என எதுகை நோக்கி மிக்கு வந்தது. வித்தை - விச்சை யென வந்தது. வித்தியா ஞானம் என்பது கல்வி ஞானம் குறித்து நின்றது. விருந்து - புதுமை. சாற்றுதல் - ஈண்டுப் பாடுதல் மேற்று. சாற்று - பாடுகின்ற பாட்டின் மேல் நின்றது; சொன்மாலை. விரும்பி யேற்றுக் கொண்டாய் என்று சொல்பவர், “களித்தாய்” எனச் சுருங்கச் சொல்லுகின்றார். ஒப்பற்ற நடராசப் பெருமானே குருமுதல்வனாய் வந்தருளினான் என்பது கருத்ததலின் “நடராச சற்குரு மணியே” என்று புகழ்கின்றார்.

     இதனால், நடராசப் பெருமானாகிய குருபரனைப் பொன்னே, மாணிக்கமே, சுடர்க்க கொழுந்தே என்பன முதலிய ஆர்வ மொழிகளால் வழிபட்டவாறாம்.

     (1)