33. கையடை முட்டற் கிரங்கல்
அஃதாவது திருக்கோயிலுக்குச்
செல்லுங்கால் உடன் கொண்டு செல்லற் பாலனவாகிய
கையுறைப் பொருள்களில் ஒன்றான கற்பூரம் கிடைக்காமை
பற்றி முருகன்பால் முறையிடுவது. கையுறைப் பொருள்களில்
சிறப்புடையது கற்பூரம் (சூடம்). ஒருகால்
திருவொற்றியூர்க் கோயிற்குச் சென்ற வடலூர்
வள்ளலார்க்கு அவ்வூர் எங்கணும் கற்பூரம்
கிடைக்காமையால் வருந்தினார்; அது தானும் அவர்
மனத்தில் நின்று அவர் திருத்தணிகையில் முருகப்
பெருமானை வழிபடச் சென்ற போது நினைவில் எழவே முருகப்
பெருமான் முன் அந்த மனக்குறையைப் பின்வரும் நான்கு
அருட்பாக்களால் உரைக்கின்றார்.
கட்டளைக் கலித்துறை
370. கார்பூத்த கண்டத் தொடுமேவு முக்கட் கனிகனிந்து
சீர்பூத் தொழுகுசெந் தேனே தணிகையில் தெள்ளமுதே
பேர்பூத்த ஒற்றியில் நின்முன்ன ரேற்றிடப் பேதையனேன்
ஏர்பூத்த வொண்பளி தம்காண் கிலனதற் கென்செய்வனே.
உரை: கருமையான கழுத்தோடு மூன்று கண்களையுடைய சிவனாகிய பழம் கனியப் பழுத்து ஒழுகும் சிறப்புடைய செந்தேன் போன்ற முருகப் பெருமானே, தெளிந்த அமுதே, பெயர் பெற்ற திருவொற்றியூர்க் கோயிலுள்ள உன்னுடைய திருமுன்பு ஏற்றுவதற்குப் பேதையாகிய நான் அழகிய ஒள்ளிய கற்பூரம் கிடைக்கப் பெறேனாயினேன், இக்குறைக்கு என் செய்வேன், எ. று.
கார்பூத்த கண்டம் - கடல் விடம் உண்டதனால் நிறம் கரிதாகிய கழுத்து. இனிய கனிகள் நன்கு பழுத்த வழிச் சாறு ஒழுகும் இயல்பு பற்றிக் “கனி கனிந்தொழுகும் செந்தேனே” என்கின்றார். “ஒள்வாழைக் கனி தேன் சொரி ஒத்தூர்” என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. பன்னூறு ஆண்டுகளாக மிக்க சிறப்புடன் விளங்குவது பற்றித் திருவொற்றியூரைப் “பேர்பூத்த ஒற்றி” என்று புகல்கின்றார். வள்ளற் பெருமான் திருவொற்றியூர்க் கோயிலுள்ள முருகன் திருமுன்னர் வழிபட்டுக் கற்பூரம் ஏற்ற முயன்ற போது கிடைக்காமை பற்றி மனம் வருந்தினராகலின் அங்குச் சென்றாலும் அது இனிது கிடைக்க வேண்டும் என்ற கருத்தால் தணிகை முருகன் திருமுன் அதனை ஏற்றி வழிபடும்போது அக்குறை உளதாதல் கூடாது என்பாராய், “ஏர்பூத்த ஒண்பளிதம் காணிலன்” என்றும், அதற்கு “என்செய்வேன்” என்றும் முறையிடுகின்றார்.
இதனால் திருவொற்றியூரில் கற்பூரம் கிடைக்காமைக்கு வருந்தி முருகன்பால் முறையிட்டவாறாம். (1)
|