பக்கம் எண் :

3702.

     அமரரும் முனிவரும் அதிசயித் திடவே
          அருட்பெருஞ் சோதியை அன்புடன் அளித்தே
     கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே
          காத்தென துளத்தினில் கலந்தமெய்ப் பதியே
     எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே
          எய்ப்பற வாழ்கஎன் றியம்பிய அரசே
     சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே
          தனிநட ராசஎன் சற்குரு மணியே.

உரை:

     தேவர்களும் முனிவர்களும் கண்டு அதிசயிக்குமாறு அன்புடன் அருட் பெருஞ் சோதியாகிய திருவருள் ஞானத்தை எனக்களித்து நலமெல்லாம் நிறைந்துள்ள சிவ நெறிக்கண் என்னைச் செலுத்திக் காத்து, எனது உள்ளத்தில் கலந்து விளங்குகின்ற உண்மைப் பதியே; உயிர் கவரும் எமன் எனப்படும் அவன் இனி உன்னை நாடி வருவானில்லை; மகனே, இனித் தளர்ச்சி யின்றி வாழ்வாயாக என்றுரைத்த அருளரசே; சமரச சன்மார்க்கச் சங்கத்தின் முதல்வனே; ஒப்பற்ற நடராசப் பெருமானாகிய என் சற்குரு மணியே வணக்கம். எ.று.

     திருவருள் ஒளி மயமாகிய சிவபெருமானையும் அவனது சிவஞானத்தையும் அருட்பெருஞ் சோதி என வடலூர் வள்ளல் குறிக்கின்றாராதலால், அதனைத் தான் பெற்றது உரைப்பாராய், “அருட் பெருஞ் சோதியை அன்புடன் அளித்து” என்றும், தேவர் முனிவர் முதலாயினார்க்கு அது வியப்பளித்தது என்பார், “அமரரும் முனிவரும் அதிசயித்திட” என்றும் உரைக்கின்றார். கமம் - நிறைவு. “கமம் நிறைந்து இயலும்” என்பது தொல்காப்பியம். எல்லா நலன்களும் நிறைந்ததாதலின், “கமமுறு சிவநெறி” என்று சிறப்பிக்கின்றார். சிவநெறிக்கண் தம்மைச் செலுத்தியது பிற நெறிக்கண் வீழ்ந்து கெடாவாறு காப்பதாயிற்று என்பார், “என்றனையே காத்து” எனவும், மீளவும் வழுவா வண்ணம் உள்ளத்தில் கலந்து நிற்கின்ற “மெய்ப் பதி” எனவும் விளக்குகின்றார். உலகவர் சாக்காட்டை விளைவிக்கும் எமனை நினைந்து அஞ்சுவ தியல்பாதல் பற்றி, “எமன் எனும் அவன் இனி இலை மகனே” எனத் தேற்றி அதனால் இனித் தளர்ச்சியின்றி இனிது வாழ்க என ஊக்கினார் என்பார், “எய்ப்பற வாழ்க என்று இயம்பிய அரசே” என்று உரைக்கின்றார். சமரச சன்மார்க்க சங்கத்தின் முதல்வனாதல் பற்றி, “சன்மார்க்க சங்கத்தின் முதலே” என்று கூறுகின்றார்.

     இதனால் மெய்ப்பதியும், அருளரசும், சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலுமாகிய ஒப்பற்ற நடராசப் பெருமானே சற்குரு மூர்த்தம் எனத் தெரிவித்தவாறாம்.

     (18)