பக்கம் எண் :

371.

    கருமருந் தாய மணிகண்ட நாயகன் கண்மணியாம்
    அருமருந் தேதணி காசலம் மேவுமென் ஆருயிரே
    திருமருங் காரொற்றி யூர்மே வியநின் திருமுன்னராய்
    ஒருமரங் கேற்றவென் செய்கேன் கற்பூர வொளியினுக்கே.

உரை:

      பிறவி நோய்க்கு மருந்தாய் நீலமணி போலும் கழுத்தை உடைய தலைவனாகிய சிவனுக்குக் கண்ணின் மணியும் பெறுதற்கரிய தேவாமிர்தமும் போன்றவரே்; தணிகை மலையில் எழுந்தருளும் எனது ஆருயிர்த் தலைவனே; செல்வ வளம் பொருந்திய திருவொற்றியூரில் உள்ள நின் திருக்கோயில் முன்பு ஒருபால் கற்பூர வொளி ஏற்றுதற்கு என் செய்வேன், எ. று.

     கருமருந்து - பிறவி நோய் தீர்க்கும் மருந்து. நீலமணி போன்ற நிறமுடைய கழுத்தையுடைய பெருமான் என்றற்கு மணிகண்ட நாயகன் என்று கூறுகிறார். சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய மணி போல முருகன் விளங்குதலால், “கண்மணி” என்றுமாம். கடல் கடைந்த தேவர்கள் ஒழியப் பிறராற் பெறுதற்கரிது என்பது பற்றித் தேவரமுதத்தை, “அருமருந்து” என்கின்றார். உடற்கு உயிர் போல உயிரின்கண் நிறைந்திருக்குமாறு விளங்க, “ஆருயிரே” என்றும் போற்றுகிறார். திருஒற்றியூர் செல்வ வகை பலவும் பெற்றிருத்தலால் “திருமருங்கார் ஒற்றியூர்” என்று பரவுகின்றார். ஒரு மருங்கு - ஓரிடம். திருவொற்றியூரில் கற்பூரம் கிடைக்காமையால் தணிகையில் அது மிகுதியும் கிடைக்க வேண்டும் என்றற்கு, “என் செய்கேன் கற்பூர ஒளியினுக்கே” என்று முறையிடுகின்றார்.

     இதனால் திருவொற்றியூரில் கிடைக்காத கற்பூரம் திருத்தணிகையில் நன்கு கிடைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டவாறாம்.

     (2)