372. பாலெடுத் தேத்தும்நற் பாம்பொடு வேங்கையும் பார்த்திடவோர்
காலெடுத் தம்பலத் தாடும் பிரான்திருக் கண்மணியே
வேலெடுத் தோய்தென் தணிகா சலத்தமர் வித்தகநின்
பாலெடுத் தேற்றக் கிடைக்குங் கொலோவெண் பளிதமெற்கே.
உரை: இடம், வலம் இரண்டிடத்தும் நின்று பரவும் பதஞ்சலி வியாக்கிர பாதர் என்ற இருவரும் பார்த்து மகிழுமாறு ஒருகாலைத் தூக்கி நின்று அம்பலத்தில் ஆடுகின்ற பெருமானாகிய சிவனுக்கு அழகிய கண்மணி போன்ற முருகனே; கையில் வேற்படையை ஏந்துபவனே; அழகிய தணிகைப் பதியில் எழுந்தருளும் ஞானமூர்த்தியே, நின் திருமுன் எடுத்து ஏத்துவதற்கு வெண்மையான கற்பூரம் எனக்குக் கிடைக்குமோ? எ.று.
பதஞ்சலி கால் பாம்பாகவும், வியாக்கிர பாதரின் கால் புலிக்காலாகவும் இருப்பது பற்றி இருவரையும் பாம்பு என்றும், வேங்கை என்றும் உரைக்கின்றார். பொன்னம்பலத்தில் கூத்தப்பிரான் திருமுன் ஒருபால் பதஞ்சலியும், ஒருபால் வியாக்கிரபாதரும் வழிபட்டு நிற்க அவன் ஒரு காலைத் தூக்கி நின்று திருநடம் புரியும் காட்சியை, “எடுத்தேத்தும் நற்பாம்பொடு வேங்கையும் பார்த்திட வோர் கால்எடுத்தம்பலத் தாடும் பிரான்” என்று புகன்றுரைக்கின்றார். வித்தகன் - ஞானமே உருவாயவன். திருவொற்றியூரில் கிடைப்பது அரிதானமையால் திருத்தணிகையில் அதுவே நிலைமையாகுமோ என்ற எண்ணத்தால், “ நின்பால் எடுத்தேற்றக் கிடைக்குங் கொலோ வெண்பளிதம்” என்று கேட்டுக் கொள்கின்றார்.
இதனால், கற்பூரம் பற்றிய குறையை நினைத்து வருந்துவது வெளிப்படுத்தவாறாம். (3)
|