26. இனித்த வாழ்வருள் எனல்
அஃதாவது, உலகியலில் பூத உடம்பு பெற்றுப் பிணி, மூப்புச் சாக்காடுகளால் துன்புற்றுத் துனித்து வருந்தும் வாழ்வை நீக்கி, இன்பமே நுகர்தற்குரிய, திருவருள் இன்ப வாழ்வு வேண்டுமென முறையிடுதலாம்.
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3730. உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான
ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி
புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம்
பொறுத்தடி யேன்தனக் களித்த
வரத்தவா உண்மை வரத்தவா ஆக
மங்களும் மறைகளும் காணாத்
தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில்
தனித்தவா இனித்தவாழ் வருளே.
உரை: வன்மை பொருந்திய வானுலகில்கண் மேன்மை குன்றாத ஞான ஒளியினால் ஓங்குகின்ற ஒப்பற்ற சித்தி புரத்தை யுடையவனே; பெரியோர்களின் சூழலை உடையவனே; செய்த குற்றங்களைப் பொறுத்து அடியேனுக்கு, ஞான வரம் அளித்தவனே; உண்மையால் மேன்மை பொருந்தியவனே; சிவாகமங்களும் வேதங்களும் காண முடியாத தன்மையை யுடையவனே; மெய்யுணர்வுக் காதரவு தருகின்றவனே; அம்பலத்தில் தனித்து நின்றாடுகின்றவனே; எனக்கு இனிமை பொருந்திய வாழ்வை அருள்வாயாக. எ.று.
உரம் - வன்மை. மண்ணுலகம் போலக் கால வெள்ளத்தால் கெடாமை பற்றி, “உரத்த வானகம்” என்று உரைக்கின்றார். உரந்தவா ஞானவொளி, உரத்தவா என வலித்தது. உரம் -ஈண்டுத் திண்மை மேற்று. உரத்தவா ஞானமாவது மெய்ம்மையால் திண்மை குன்றாத திருவருள் ஞானம் என்பதாம். சித்திபுரம் - வடலூர்க்குச் சித்தி புரம் என்பது ஒரு பெயர். வடலூர்ச் சிற்றம்பலத்தின்கண் எழுந்தருளுவது பற்றி, “சித்தி புரத்தவர்” எனச் சிறப்பிக்கின்றார். பெரியோர் புரம் - ஞானவான்கள் உறையும் இடம். சிவஞானிகளின் திருவுள்ளத்தையே கோயிலாகக் கொள்பவனாதலால், “பெரியோர் புரத்தவா” எனப் புகல்கின்றார். குணமும் குற்றமுடைமை பற்றி, “குற்றம் பொறுத்து” என்றும் திருவருள் ஞானத்திற்குத் தகுதி யுடைமை விளங்க, “அடியேன் தனக்கு அளித்த வரத்தவா” என்றும் இயம்புகின்றார். வரமளித்தவனே என்பது அளித்த வரத்தவா என மாறி நின்றது. பொய்யா வரம் தருதல் பற்றி, “உண்மை வரத்தவா” என உரைக்கின்றார். தரம் - தன்மை. ஈண்டு வேதங்களும் ஆகமங்களும் மறைகளும் காணாத தரத்தவா” எனக் கூறுகின்றார். மெய்யுணர்விற்குப் பொருளாய்த் தோன்றி இன்பம் தருவது பற்றி, “அறிவு ஆதரத்தவா” எனப் போற்றுகின்றார். அறிவு ஆதரத்தவன் - மெய் யுணர்வை விரும்புபவன். அம்பலத்தில் ஆடல் புரியுங்கால் உமையம்மையினின்றும் பிரிந்து தனிச் சிவமாய் நின்று அவள் காண ஆடுதலின், “பொதுவில் தனித்தவா” என உரைக்கின்றார். மண்ணக வாழ்வு துன்ப மிகுதியால் துனி விளைவித்தலின் அதனை நீக்கி, “இன்பமே நிறைந்த வாழ்வருளுக” என்பாராய், “இனித்த வாழ்வருள்”என வேண்டுகின்றார்.
இதனால், உலகியல் வாழ்வு துன்பமும், தீமையும், சிறுமையும் பிறவும் நிறைந்திருத்தலின் இவ்வாழ்வு வேண்டாம் என விண்ணப்பித்தவாறாம். இப்பகுதியில் வரும் ஏனைப் பாட்டுக்களுக்கும் இதுவே கருத்தாகக் கொள்க. (1)
|