பக்கம் எண் :

3739.

     இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின்
          இளம்பதப் பாகொடு தேனும்
     கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து
          கருத்தெலாம் களித்திட உண்ட
     மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும்
          வானநாட் டவர்களும் வியக்கத்
     தனித்தமெய்ஞ் ஞான அமுதெனக் களித்த
          தனியவா இனியவாழ் வருளே.

உரை:

     இனிக்கும் இயல்புடைய செங்கரும்பில் இருந்து, பிழிந்தெடுத்த தீவிய சாற்றினைக் காய்சிசி, இளம் பதத்தில் எடுத்த பாகொடு தேனையும், நன்கு கனிந்த இனிய கனியின் சாற்றையும் கலந்து, மனமும் உடம்பும் களித்திட உண்டு மகிழ்கின்ற செல்வ மக்களும், அமுத உணவுண்டு இன்புற்றிருக்கும் வான நாட்டுத் தேவர்களும் கண்டு வியக்குமாறு ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய அமுதினை எனக்கு அளித்தருளிய ஒப்புயர் வில்லாத பெருமானே; இனிய வாழ்வினை எனக்கு அருளுவாயாக. எ.று.

     இனிமைச் சுவையைத் தனக்கு இயல்பாகக் கொண்டதாகலின், “இனித்த செங்கரும்பில் எடுத்த தீஞ்சாறு” என இயம்புகின்றார். சூடு மிகக் காய்ச்சாமல் பக்குவத்தில் எடுத்த பாகினை “இளம் பதப் பாகு” எனக் குறிக்கின்றார். கனிந்த தீங்கனி என்பது எதுகை நோக்கி, “கனித்த தீங்கனி” என வலித்து நின்றது. இரசம் - இரதம் என வந்தது. செங் கரும்பின் இளம் பதப் பாகும் தேனும் கலந்த கலவையைச் செல்வம் படைத்த மக்களே எளிதிற் பெற்று உண்பராதலின் அவர்களை, “கருத்தெலாம் களித்திட உண்ட மனிதர்” எனக் குறிக்கின்றார். மனமும் வாயும் சுவைத்து மகிழ உண்பது பற்றி, “கருத்தெலாம் களித்திட உண்ட”என மொழிகின்றார். தேவருலகத்துத் தேவாமுதத்தை உண்ணும் தேவர்களாலும் கண்டறியப் படாத சுவையை யுடையது மெய்ம்மை சான்ற சிவஞானமாகிய அமுதம் என விளக்குவதற்கு, “மனிதரும் வானநாட்டவர்களும் வியக்கத் தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்களித்த தனியவா” என உரைக்கின்றார். ஒப்புயர் வில்லாமை விளங்க, “தனித்த மெய்ஞ் ஞானம்” என்றும், “தனியவா” என்றும் சாற்றுகின்றார்.

     (10)