பக்கம் எண் :

375.

    எய்யா தருள்தணி காசலம் மேவிய என்னருமை
    ஐயா நினது திருவடி ஏத்தியன் றோஅயனும்
    செய்யாள் மருவும் புயனுடைத் தேவனும் சேணவனும்
    நையாத ஆயுளும் செல்வமும் வண்மையும் நண்ணினரே.

உரை:

   பெறுபவர் அறியா வகையில் அருள் ஞானம் வழங்கும் தணிகை மலையில் எழுந்தருளிய என்னுடைய அருமையான தலைவனே, உன்னுடைய திருவடிகளை ஏத்தித்தொழுது அன்றோ பிரமனும், திருமகளைக் கூடும் தோள்களையுடைய தேவனாய திருமாலும், வானுலகத்து இந்திரனும் குறையாத ஆயுளையும் செல்வத்தையும் ஏனை வளங்களையும் பெற்றுள்ளனர்! எ.று.

     தன் திருவருள் ஞானம் பெறுபவர்க்கு அவரறியாவாறு உள்நின்று அதனை அருளுதல் பற்றி, “எய்யா தருள் தணிகாசலம் மேவிய ஐயா” என்று உரைக்கின்றார். எய்யாமை, அறியாமை என்பது தொல்காப்பியம். “நானேதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்” (ஆனைக்கா) என்று திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. ஐயன் - தலைவன். செய்யாள் - திருமகள். சேணவன் - வானுலகத்து இந்திரன். நைதல் - குறைதல்; தேய்தலுமாம்.

     இதனால் பிரமன் திருமால் முதலிய தேவர்கள் திருவடி ஞானத்தால் குறையாத செல்வம் பெற்றமை கூறியவாறாம்.

     (2)