பக்கம் எண் :

3761.

     மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே
          மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
     கணிக்கறியாப் பெரிநிலையில் என்னோடுநீ கலந்தே
          கரை கடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
     தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே
          தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
     திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
          சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

உரை:

     ஆன்மாக்களைப் பிணிக்கின்ற கலை முதலிய எல்லாத் தத்துவங்களையும் ஒழுங்குற அமைக்க வல்ல சிவ பரம்பொருளே; சித்தர்களுக் கெல்லாம் முடிமணியாய்த் திகழ்பவனே; திருநடனம் புரிகின்ற நாயகனே; ஒப்பற்ற தலைமை நிலையில் உள்ள பதிப் பொருளே; மாற்றுக் காண மாட்டாத பொன் போன்றவனே; உயிரறிவை மறைக்கின்ற அஞ்ஞானத் திரைகள் எல்லாம் போக்கி ஞான ஒளி திகழும் ஞான நாட்டம் என்னும் கதவைத் திறந்து நினது ஞானத் திருவடியைக் காணச் செய்தருள்க; அளவைகளால் அளந்தறிய முடியாத சிவபோகப் பெரு நிலையில் என்னோடு கூடி அளவிறந்த பெரும் போகத்தை யான் பெறச் செய்தருள்க; அருளரசே; தணிக்கமுடியாத சிவபோகக் காதல் என் உள்ளத்தே மேன்மேலும் பெருகுகின்றது; இனி என்னால் அதனைத் தாங்கமுடியாது காண். எ.று.

     கலை - தத்துவக் கூறு. அவைகள் முப்பாத்தாறும் தொண்ணூற்றாறுமாய் விரிந்து உலகியல் வாழ்வில் உயிர்களைப் பிணித்திருத்தலால் அவற்றை ஒழுங்குற அமைந்து தத்தமக்குரிய பணிகளைப் புரியுமாறு அமைத் தளிப்பது பற்றிச் சிவபரம் பொருளை, “திணிக் கலையாதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே” என்றும், இத் தத்துவங்களுக்கு அதீதமாய் நின்று முறையாகச் செயற் படுத்துவதால் சிவ மூர்த்தத்தை, “தனித் தலைமைப் பதியே” என்றும் புகல்கின்றார். திருவருள் ஞானத்தை “மணிக் கதவம்” என்றும், மும்மலப் பிணிப்பால் அறிவு மறைக்கப் படுதலின் அவற்றால் உளவாகும் அஞ்ஞான வகையை, “மறைப்பை எல்லாம்” என்றும் கூறுகின்றார். சிவன் திருமேனி உயர்ந்த பொன்னிற முடையதாதலின், “மாற்றறியாப் பொன்னே” என்றும், பொன்னொளி திகழும் நின் ஞான வடிவைக் காட்டுக என வேண்டுவாராய், “நின்வடிவது காட்டாயோ” என்றும் வேண்டுகின்றார். தத்துவாதீதப் பெரு வழியாதலின் அது காட்சி, கருதுதல், உரை என்ற மூவகை அளவைகளால் அளக்கப் படாமை தோன்றச் சிவபோக நிலையை, “கணிக்க அறியாப் பெருநிலை” என்றும், அந்நிலையில் ஆன்மா சிவத்தோடு கலந்து சிவானந்த ஞான வடிவு திருவருள் ஒளியால் பெறுதலால், “என்னொடு நீ கலந்தே”என்றும், ஆண்டுப் பெறுகின்ற சிவபோகம் அளவிறந்ததாகலின் அதனைக் “கரை கடந்த பெரும் போகம்” என்றும் உரைக்கின்றார். அதனைப் பெறுதற் கெழுந்த ஞான போகக் காதல் மேன்மேலும் பெருகுகின்றமை தோன்ற, “தணிக் கறியாக் காதல் மிகப் பெருகின்றது” எனவும், அதனை அடக்க முடியாமை புலப்பட, “இனித் தாங்க முடியாது” எனவும் எடுத்தோதுகின்றார். தணித்தல் - குளிரச் செய்தல். காதல் வேட்கை வெம்மை யுடையதாகலின் “தணிக்க அறியாக் காதல்” எனக் குறிக்கின்றார்.

     இதனால், திருவருள் ஞானத்தால் பெறுதற்குரிய சிவபோகத்தின்பால் உண்டாகிய ஞானக் காதல் பெருகுவதை எடுத்துரைக்கின்றார்.

     (2)