3766. கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன்ஒன்றும் கொண்டறியார் வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமும் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய்
சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.
உரை: சித்தர்களுக்கு முடிமணியாய்த் திகழ்பவனே; நடம் புரியும் நாயகனே; பலவாகக் கூறப்படுகின்ற சமயங்களையும் அவற்றின் கொள்கைகளையும் மேற்கொண்டு சத்தமிட்டுக் கூறுகின்றவர்கள் ஒரு பயனும் கொண்டறியாமல் வீணே வெந்து சாம்பராகின்றனர்; சிலர் மண்ணாய்க் கெடுகின்றனர்; அவர்களைப் போல நீண்ட இவ்வுலகில் அழிந்தொழிய நினைத்தேனில்லை; அவரின் வேறாக மேல் நிலையை அடையும் திறத்தையும் விரும்பினேன்; என்னையும் அவ்விடத்தே உயர்த்தி யுள்ளாய்; இனி எனது ஞானக் கதவினைத் திறந்து எனக்கு ஆங்குள்ள ஞான வமுதத்தை நல்கித் தெளிவு தருகின்ற உண்மை ஞானம் எனக்குக் கைவர அருள்வாயாக. எ.று.
உலகில் கற்றவரிடையே நிலவுகின்ற சமயங்களும் கொள்கைகளும் பலவாய் உறுதிப் பயனை நல்காவாய் வீண் படுவதைக் கண்டு மனம் வருந்துகின்றாராதலால் வடலூர் வள்ளல், “கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக் கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டறியார்” என்றும், அவர்கள் முடிவில் பயனின்றிச் செத்துச் சாம்பராதலும் மண்ணிற் புடையுண்டு மண்ணாதலும் புலப்பட, “வீணே நீறுகின்றார் மண்ணிற் புதையுண்டு மண்ணுதலும் புலப்பட, “வீணே நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்” என்றும் உரைக்கின்றார். நீறு - சாம்பல். நாறுதல் - முடை நாறும் மண்ணாதல். அவர்கள் அனைவரும் உலகில் தமக்கோ உலகிற்கோ பயனின்றிக் கெடுவது கண்டு மனத்தின்கண் வெறுப்புற்றமை தோன்ற, “அவர் போல் நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ” என்று கூறுகின்றார். ஓகாரம் எதிர்மறை நினைக்கவில்லை என்பது கருத்து. சமய மதக் கொள்கைகளிற் பிணிப்புண்டுக் கீழ்மைப்படாமல் இவற்றின் நீங்கி ஞான நெறியில் மேல்நிலை அடைய விரும்பினேன்; என்னையும் ஞான நெறியில் உயர்த்தி யுள்ளாய் என்பாராய், “நிலை மேல் ஏறுகின்ற திறம் விழைந்தேன் அங்கே ஏற்றுவித்தாய்” என எடுத்தோதுகின்றார். மேலதாகிய சிவஞானச் செந் நிலையில் ஒளிர்கின்ற நெறி காட்டி ஆங்குப் பெறலாகும் ஞான போகத்தைத் தந்து தெளிந்த சிவஞானத்தை அடியேன் எய்துதற்கு அருள் புரிக வென வேண்டுவாராய், “அங்கே இலங்குகின்ற திருக்கதவு திறந்து இன்னமுதம் அளித்தே தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தியுறப் புரிவாய்” என்று வடலூர் வள்ளல் முறையிடுகின்றார்.
இதனால், மெய்ஞ்ஞான சித்தியுற வேண்டுமென வடலூர் வள்ளல் விண்ணப்பித்தவாறாம். (7)
|