பக்கம் எண் :

3769.

     திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே
          திருவருட்பேர் ஒளிகாட்டித் திருஅமுதம் ஊட்டிக்
     கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து
          கனிந்துயிரில் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
     உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா
          தொன்றாகிக் காலவரை உரைப்பஎலாம் கடந்தே
     திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
          சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

உரை:

     சித்தர்களின் முடிமணியாய் ஞான நாடகம் புரியும் தலைவனே; செம்மைச் சான்று விளங்கும் இத்தருணத்தில் ஞானக் கதவைத் திறந்து திருவருளாகிய பெரிய ஒளியைக் காட்டிச் சிவஞானமாகிய அமுதத்தை அளித்து உள்ளம் உவந்து என் உடம்பிற் புகுந்து உள்ளத்திற் கலந்து, பின் உயிரில் கலந்து அறிவில் தோய்ந்து உலகனைத்தும் உருப்படுமாறு ஒடுங்குகின்ற ஊழிதொறும் பிரிதலின்றி ஒன்றாய்க் கால வரையறை கடந்து மனநிறைவோடு விளக்கமுற்று நினது திருவருளைச் செய்தருள வேண்டுகின்றேன். எ.று.

     ஞானப் பேற்றிற்குரிய மனப் பக்குவம் எய்தியிருப்பது இத்தருணம் என வற்புறுத்தற்கு, “திருத்தகும் ஓர் தருணம் இதில்” என உரைக்கின்றார். சிந்தைத் தெளிவு எய்துதற்கு முன் அறியாமையால் மறைப்பண்டிருந்தமை விளங்க, “திருக்கதவம் திறந்து” என்றும், திருவருள் ஒளி தோன்றி ஞான வின்பத்தை நல்கிய குறிப்பை, “திருவருட் ஒளி தோன்றி ஞான வின்பத்தை நல்கிய குறிப்பை, “திருவருட் பேரொளி காட்டித் திருவமுதம் ஊட்டி” என்றும், உவகையோடு தனக்குள் இறைவன் எழுந்தருளும் திறம் புலப்பட, “கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து” என்றும் இயம்புகின்றார். உடம்பினுள் புகுந்து கலந்த இறைவன் உள்ளிருக்கும் உயிரோடும் உயிரினுடைய அறிவினுள்ளும் கலந்து கொண்டமை பற்றி, “உளத்தில் கலந்து கனிந்து உயிருள் கலந்து அறிவிற் கலந்து” எனக் கூறுகின்றார். இவ்வாறு தனக்குள் புகுந்து கலந்தது போல் ஏனை உலகுயிர்களுள்ளும் கலந்து எக்காலத்தும் ஒன்றாய் கால வரையறைகளைக் கடந்து நின்று திருவருள் ஆட்சியினைச் செய்தருளுவேண்டும் என விண்ணப்பிக்கின்றாராதலால், “உலகம் அனைத்தும் உருத்தகவே அடங்குகின்ற ஊழி தொறும் பிரியாது ஒன்றாகிக் காலவரை உரைப்ப வெலாம் கடந்தே திருத்தியொடு விளங்கி அருளாடல் செயவேண்டும்” என உரைக்கின்றார். ஊழிக் காலத்தில் வேறு வேறு வகை வகையாய் இருக்கின்ற உலகப் பொருள் அத்தனையும் ஒன்றாய் அடங்குதல் பற்றி, “உலகனைத்தும் உருத் தகவே அடங்குகின்ற ஊழி” என்றும், அவ்வூழிக் காலத்தில் பிரிவின்றிக் கூடி இருப்பன பலவும் வேறு வேறாய்ப் பிரிந்து ஒடுங்குவது பற்றி, “ஊழி தொறும் பிரியாது ஒன்றாகி” என்றும் இசைக்கின்றார். ஊழிக் காலத்திலும் பிரிவின்றிக் கலந்து ஒன்றி உலகை உய்வித்தல் வேண்டும் என்று வேண்டுவாராய், “காலவரை உரைப்பவெலாம் கடந்து திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும்” என உரைக்கின்றார். ஊழி யந்தத்திலும் இறைவன் உடனிருந்தாலன்றி உலகிற்கு நற்பயன் விளையாது என்பதனால், “திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும்“ என மொழிகின்றார்.

     இதனால், ஊழிக் காலத்தும் இறைவன் உலகுயிர்களோடு உடனிருந்து அருளல் வேண்டும் என வடலூர் வள்ளல் இறைவன்பால் முறை செய்து கொண்டவாறாம்.

     (10)