பக்கம் எண் :

3772.

     சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும்
          துட்ட னேன்அருட் சுகப்பெரும் பதிநின்
     வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன்
          வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
     ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும்
          உன்னை விட்டயல் ஒன்றும்உற் றறியேன்
     தாழ்வி லாதசீர் தருவடல் அரசே
          சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

உரை:

     சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; குறையாத சிறப்புப் பொருந்திய வடலூரின்கண் எழுந்தருளும் அருளசே; ஆராய்ச்சியின்றி வருந்தும் மனத்தொடு கூடி அலமரும் துட்டனாகிய நான் திருவருள் இன்பப் பெருந் தலைவனாகிய நின்னுடைய திருவருள் வாழ்வை விரும்பி நின் திருமுன் வந்து நிற்கின்றேன்; ஆனால் வள்ளற் பெருமானாகிய உன்னுடைய திருவுள்ளக் கருத்தை அறிகிலேன்; ஊழ்வினை என்னை விடாமையால் அரைக்கண நேரமும் உன்னை விட்டு வேறு ஒரு பொருளையும் நினைந்தறியேன்; ஆதலால் எனக்கு நின் திருவருள் வழங்குதல் வேண்டும். எ.று.

     சில தலங்கள் கால வேறுபாட்டால் சிறப்பு மிகுவதும் குறைவதும் உண்டெனினும் வடலூர் தன் சிறப்பில் எக்காலத்தும் குறையாமை விளங்க, “தாழ்விலாத சீர்தரு வடல்” என உரைக்கின்றார். சூழ்தல் - ஆராய்தல். ஒருவர்க்கு எய்தும் துன்பங்களுக் கெல்லாம் மனம் ஒன்றி ஆராய்தல் இல்லாமை காரணமாதலால், “சூழ்விலாது உழல் மனத்தினால் சுழலும் துட்டனேன்” எனத் தமது குறையை எடுத்துரைக்கின்றார். துட்டன் - கெட்டவன். ஒருவன் துட்டனாதற்குக் காரணம் மன வடக்கமின்றி அலமரும் இயல்பு என்பது இதனால் பெறப்படும். உண்மையாராய்ச்சி செய்து திருவருள் வாழ்வல்லது உயிர்க்கு உறுதி பயப்பது வேறு யாதுமில்லை என்பதை அறியா தொழிந்தமை விளங்க, “துட்டனேன் அருட் சுகப் பெரும் பதி நின் வாழ்வு வேண்டினேன்” என விளம்புகின்றார். துட்டனாய்த் திருந்த தான் பின்னர்த் திருவருளின் நலத்தை யுணர்ந்தமை தோன்ற, “நின் வாழ்வு வேண்டினேன் வந்து நிற்கின்றேன்” எனவும், எனினும் நின் திருவுள்ளக் கருத்து அறியாமையால் வாடுகின்றேன் என்பாராய்,. “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” எனவும், எனினும் நின் திருவுள்ளக் கருத்து அறியாமையால் வாடுகின்றேன் என்பாராய், “வள்ளலே உன்றன் மனக் குறிப்பறியேன்” எனவும் உரைக்கின்றார். தமக்குற்ற அல்லல்களுக்கு எல்லாம் ஊழ்வினை காரணம் என உணர்ந்து அதன் சூழ்ச்சிக்கு அகப்படாது உய்தி பெறுதற் பொருட்டு உன்னைக் கணநேரமும் மறவாது ஒழுகுகின்றேன் என்பார், “ஊழ் விடாமையில் அரைக்கணம் எனினும் உன்னை விட்டயல் ஒன்றும் உற்றறியேன்” என உரைக்கின்றார். அரைக்கணமும் மறவாது இறைவனை நினைந்தொழுகுவாரை ஊழ்வினை தொடராது என்பது சான்றோர் அறவுரை. “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு” எனத் திருவுள்ளுவர் உரைப்பது காண்க.

     இதனா, ஊழ்வினையால் மனம் சுழன்று தடுமாறிய தான் அதன் பிடியினின்றும் நீங்குதற் பொருட்டு இறைவனை யல்லது வேறு ஒன்றையும் எண்ணாமை எடுத்தோதியவாறாம்.

     (3)