பக்கம் எண் :

3779.

     கயவு செய்மத கரிஎனச் செருக்கும்
          கருத்தி னேன்மனக் கரிசினால் அடைந்த
     மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன்
          வள்ளல் லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
     உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என்
          உயிர் தரித்திடா துன்அடி ஆணை
     தயவு செய்தருள் வாய்வடல் அரசே
          சத்திய யச்சபைத் தனிப்பெரும் பதியே.

உரை:

     வடலூரின்கண் எழுந்தருள் அருளரசே; சத்திய ஞான சபையையுடைய தனிப் பெருந் தலைவனே; பெரிய மதம் சொரிகின்ற யானை போலச் செருக்கு மிக்க மனத்தை யுடையவனாகிய யான், மனத்தின் கண் உளதாகிய குற்றத்தால் விளைந்த மயக்கம் நீங்குமாறு நின்னுடைய திருமுன் வந்து நிற்கின்றேன்; எனினும் வள்ளலாகிய உன்னுடைய திருவுள்ளக் கருத்தினை அறிகிலேன்; அடியேன் உய்யுமாறு மனமுவந்து அருள் புரியாயாயின் என்னுடைய உயிர் கெட்டொழியும்; இது உன் திருவடி ஆணையாகத் தெரிவிக்கின்றேன்; அருள் கூர்ந்து எனக்கு உன் திருவருள் ஞானத்தை அருளுவாயாக. எ.று.

     கயவு செய் மதகரி, பெரிய உடம்பினையும், மதம் பொழியும் இயல்பினையும் உடைய யானை. பெருமை என்னும் பொருளதாகிய கய என்னும் சொல்-கயவு என வந்தது. ‘மயந்தலை மடப்பிடி’ என்றாற் போல, செருக்கு மிக்க மனமும் ஒழுக்கமும் உடையவரைக் கயந்தலை மதகரிக்கு ஒப்பிடுவது மரபாதலின், “மதகரி எனச் செருக்கும் கருத்தினேன்” என்றும், மனத்தில் எழும் தீய நினைவுகளால் அது மாசு படுவதால் அதனை “மனக் கரிசு” என்றும் குறிக்கின்றார். கரிசு - குற்றம். மனம் மாசு பட்ட வழி மனமும் அறிவும் மயங்குதலால், “மனக்கரிசினால் அடைந்த மயர்வு” எனவும், மயக்கம் ஒழிந்தாலன்றித் தெளிவும் ஞான நாட்டமும் பிறவாவாகலின், “மயர்வு நீக்கிட வந்து நிற்கின்றேன்” எனவும் மொழிகின்றார். இறைவன் திருவருளாலன்றி மனமாசு நீங்குதற்கு வழி யில்லாமையால், “வள்ளலே உன்றன் மனக்குறிப் பறியேன்” என்று கூறுகின்றார். உயவு - இரக்கம். என்பால் இரக்கமுற்று யான் உய்தி பெற நீ அருள் புரிதல் வேண்டும்; இல்லையாயின் என் வாழ்வு நிலை பெறாது என்பாராய், “உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என் உயிர் தரித்திடாது” என உரைக்கின்றார். இக்கருத்தை வற்புறுத்தற்கு “உன் அடி ஆணை” என விளம்புகிறார். அருள் ஞானம் வழங்குதற்கு இறைவன் திருவுள்ளத்துத் தயவு இன்றியமையாததாதலால், “தயவு செய்து அருள்வாய்” என உரைக்கின்றார்.

     இதனால், மனத்தின்கண் படியும் மாசு மயக்கம் எய்துவித்தலின் அதனைப் போக்குதற்குரிய திருவருள் ஞானத்தை வழங்கினாலன்றித் தமக்கு உய்தி யில்லை என முறையிட்டவாறாம்.

     (10)