30. திருவருட் பேறு
அஃதாவது, இறைவன் திருவருளைப் பெறுதல் பொருட்டு, விண்ணப்பம் செய்வதாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3780. படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
பதியைஅடை வித்தீர் அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே.
உரை: அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற பெருமானே; நீ மேலான ஞான நடனத்தைச் செய்கின்ற அருட் பதியை அதற்குரிய படிகள் எல்லாம் ஏறி அடையுமாறு அருளினாய்; அங்ஙனம் அடைந்த எனக்கு, அவ்வருள் நிலையமாகிய பதியின் நடுவில் விளங்குகின்ற கொடிகள் நிறைந்த மணிமாடத்தை யுடைய திருக்கோயிலை எளியேன் காணச் செய்து, அக்கோயிலில் கோபுர வாயிலில் குற்றமில்லாத அழகிய கதவைத் திறந்து காட்டிப் பின்னர் அதனை மூடும்படி செய்தருளி விட்டாய்; அதனைத் திறந்து அடியேனுக்கு அருளுதல் வேண்டும்; அதற்கு ஏற்ற தருணம் இதுவாகும்; தாமதித்தால் நான் அரைக்கணமும் உயிர் தாங்க மாட்டேன்; ஆதலால் எனக்குத் திருவருளை விரைந்து செய்தருள வேண்டும். எ.று.
அம்பலத்தில் ஞான நடம் புரியும் பெருமானாதலால் அவன் நடம் புரியும் அருள் ஞானப் பதியாவது தத்துவாதீதப் பரவெளியாம். அதனை யடைதற்குத் தத்துவங்களாகிய படிகள் மேல் ஏறுதல் வேண்டும். அங்ஙனம் ஏறுதற்கு அவன் திருவருள் இன்றியமையாதாதலால், “படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரம நடம் புரியும் பதியை அடைவித்தீர்” எனக் கூறுகின்றார். திருக்காளத்தி மலையேறிச் சிவத்தைக் கண்ட கண்ணப்ப நாயனாருடைய செயலைப் “பேணு தத்துவங்க ளென்னும் பெருகு சோபானம் ஏறி ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர்” என்று சேக்கிழார் பெருமான் குறிப்பது ஈண்டு நினைவு கூரத் தக்கது. இதனால், வடலூர் வள்ளல் தத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டு அத்தத்துவம் முப்பத்தாறினையும் ஆராய்ந்து கடந்து, தத்துவாதீதமாகிய பரசிவப் பதியைக் கண்டருளிய திறம் குறிப்பாய்த் தெரிவிக்கின்றார். அத்தத்துவாதீதப் பெரும்பதியில் சிவ பரம்பொருள் எழுந்தருளும் திருக்கோயிலைக் கண்டு கொண்ட திறத்தை, “அப்பதி நடுவே விளங்கும் கொடிகள் நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக் கொடுத்தீர்” என்றும், அந்த ஞானக் காட்சியில் திருக்கோயிலின் கோபுர வாயிலும், அவ்வாயிலின்கண் நிற்கும் திருக்கதவும் காணப் பட்டமை விளங்க, “அக்கோயிலிலே கோபுர வாயிலிலே திருக்கதவம் திறப்பித்துக் காட்டி” என்றும், கண்ட காட்சி மீளவும் மறைந்தமை புலப்பட, “திரும்பவும் நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்” என்றும் முறையிடுகின்றார். திறந்த கதவம் மூடிக் கொண்டமை பற்றி ஆறாத் துயரம் உறுகின்றாராதலால், “திறந்திடுதல் வேண்டும் இது தருணம் இனி அரைக்கணமும் தரியேன்” என்று வருந்துகின்றார். படிகளாகிய தத்துவங்கள் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூன்று வகையாய், பின்னர் இருபத்துநாலும் ஏழும் ஐந்துமாக முப்பத்தாறாய் விரிந்து நிற்றலின் அவை யனைத்தும் அகப்பட, “படிகள் எலாம்” என்று குறிக்கின்றார். பொறி புலன்களை அடக்கி யோகக் காட்சியை மேற்கொண்டு படிப்படியாகத் தத்துவங்களைக் கடந்து அதீதமாகிய சிதாகாச ஞானப் பதியை அடைந்த வடலூர் வள்ளல், சாக்கிரத்தே அதீதத்தைப் புரியும் சான்றோராதலால், தமது யோக நெறிக்குத் துணை புரிந்த திருவருளை உடன் உணர்ந்து உரைக்கின்றமை புலப்பட, “ஏற்றுவித்தீர்” எனவும், “அடைவித்தீர்” எனவும் சிவன் செயலாகச் செப்புகின்றார். சிதாகாசப் பெருமதியின் நடுவிடத்தே காட்சி தருகின்ற திருவருட் கோயிலைக் காணும்படி செய்தருளிய அருட் செயலை, “பதி நடுவே விளங்கும் கோயிலையும் காட்டிக் கொடுத்தீர்” என்று கூறுகின்றார். யோகக் காட்சியில் மானத வெளியில் தோன்றிய திருவருட் கோயிலைக் கண்டு கொண்ட வள்ளற் பெருமான் கோபுர வாயிலைக் காண்கின்றார்; அக் கோயிற் கதவம் திருவருளால் திறந்து உள்ளே திகழும் திருவருள் ஞான ஒளியைக் காட்டிப் பின்னர் மூடிக் கொண்டமை விளங்க, “கோபுர வாயிலிலே திருக்கதவம் திறப்பித்துக் காட்டித் திரும்பவும் நீர் மூடுவித்தீர்” என்று உரைக்கின்றார். திருக்கதவம் திறந்து காட்டிய திருவருள் ஞான ஒளியின் காட்சி, பேரின்பம் சுரத்தலால் அதனைக் காணவெழும் ஆர்வத்தை வெளிப்படுத்தற்கு, “திறந்திடுதல் வேண்டும்” என்றும், “ஆர்வம் குறைதற்கு முன் திறந்திடுதல் வேண்டும்; அதற்கேற்ற மனப் பக்குவம் தமக்கு அமைந்துளது என்பாராய், “திறந்திடுதல் வேண்டும் இது தருணம்” என்றும், தாமதமாயின் ஆர்வ மிகுதியால் தமக்கு உயிர் நில்லாது என்றற்கு, “இனி அரைக்கணமும் தரியேன்” என்றும், “விரைந்து அளித்து அருள்வீர்” என்றும் முறையிடுகின்றார். திருவருள் ஞான நிலையத்தைக் கோயில் என உருவகம் செய்கின்றாராதலின் அதற்கேற்பக் “கொடிகள் நிறை மணிமாடம்” எனவும், “கோயில்” எனவும், “கோபுர வாயில்” எனவும், “திருக்கதவம்” எனவும் குறிக்கின்றார். உலகியல் கதவுகட்கு உள்ள குற்றங்கள் ஞானக் கோயில் கதவுக்கு இல்லையென்பது தோற்றுவித்தற்கு, “செடிகள் இலாத் திருக்கதவம்” என்று சிறப்பிக்கின்றார். செடி - குற்றம்.
இதனால், சாக்கிராதீதத்தில் யோகக் காட்சியுற்றுத் தத்துவாதீதப் பரவெளியில் திருவருள் ஞானக் கோயிலைக் கண்டு திருக்கதவம் திறந்து சிவதரிசனம் பெற்று இன்புற்ற திறம் கூறியவாறாம். (1)
|