3781. பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ
பெறுகஎன அதுதிறக்கும் பெருந்திறவுக் கோலும்
எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர்
இதுதருணம் திறந்ததனை எடுக்கமுயல் கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
அரைக்கணத்துக் காயிரம்ஆ யிரங்கோடி ஆக
வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே.
உரை: அழகிய அம்பலத்தின்கண் நடம் புரியும் கூத்தப் பெருமானே; எனக்குப் பெட்டி ஒன்றைத் தந்து இதன்கண் கெடாத பெரிய பொருள் ஒன்று உண்டு; இதனை நீ பெற்றுக் கொள்க எனத் திருவாய் மலர்ந்து அப்பெட்டியைத் திறப்பதற்குரிய பெரிய திறவுகோல் ஒன்றையும் எட்டும் இரண்டும் தெரியாதவனாகிய என்னுடைய கையிலே கொடுத் தருளினீர்; இச்சமயத்தில் யான் இப்பெட்டியைத் திறந்து அதனுள் இருக்கும் பெரும் பொருளை எடுத்துக் கொள்ள முயலுகின்றேன்; என் முயற்சி முற்றாதவாறு தடை செய்ய நினைத்தல் வேண்டா; தடுக்கப்படின் அரைக்கணமும் நான் உயிர் வாழேன்; அரைக்கண நேரம் தாமதித்தாலும் ஆயிரம் ஆயிரம் கோடியாக வட்டியோடு நும்மிடத்தே வளைத்து வாங்குவேன்; இது நும்மேல் ஆணை. எ.று.
இதன்கண் பெட்டி என்றது திருவருட் சிவயோகம். இதனுள் இருக்கும் பெரும் பொருள் என்பது சிவயோகத்தால் பெறுதற்குரிய சிவபோகம். அதனைத் திறக்கும் திறவு கோல் திருவருள் ஞானமாகும். சிவயோகத்துக்குள் சிவபோகம் இருத்தலின், “பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு” என்று கூறுகின்றார். சிவபோகத்தினும் பெரிய பொருளும், என்றும் கெடுதல் இல்லாத தன்மையுடையதும் எவ்வுலகிலும் இல்லாமை பற்றி அதனை “உலவாத பெரும்பொருள்” என உரைக்கின்றார். சிவயோகத்தின் முடிவில் இச்சிவபோகம் என்றும் எய்த உளவாதல் பற்றி, “உண்டு” என்றும், “இது நீ பெறுக” என்றும் உரைக்கப்படுகிறது. சிவயோகம் கைகூடுதற்குத் திருவருள் ஞானம் வேண்டப்படுதலின் அதனைத் திறவு கோலாக்கி, “அது திறக்கும் பெருந் திறவு கோல்” என்று கூறுகின்றார். திருவருள் ஞானத்தால் சிவயோகம் புரிந்து சிவபோகம் நுகரப்படுதலின், “பெட்டி” என்றும் “பெரும் பொருள்” என்றும், “பெருந் திறவு கோல்” என்றும் உருவக வாயிலாக விளக்குகின்றார். திருவருள் ஞானத்தின் பெருமை தோன்றப் “பெருந் திறவுகோல்” என்று பேசுகின்றார். ஒன்றும் அறியாதவனை எட்டும் இரண்டும் அறியாதவன்” என்பது மரபு; “அ உ அறியா அறிவில் இடை மகனே” என்று பண்டையோர் இக்குறிப்பை வைத்துப் பழிப்பது வழக்கம். இவ்வாறே மணிவாசகப் பெருமானும் தம்மை “எட்டினோடு இரண்டும் அறியேனைப் பட்டி மண்டபம் ஏற்றினை” (சதகம்) என்று கூறுவது காண்க. திருவருள் ஞானமில்லாத எளியவனாகிய என் கையில் கொடுத்தருளினீர் என்றற்கு, “எட்டிரண்டும் தெரியாதேன் என் கையிலே கொடுத்தீர்” என்று கூறுகின்றார். கையிலே கொடுத்தலாவது சிவபோகப் பேற்றிற்குரிய நெறியாகிய சிவயோகத்தை உபதேசித் தருளுவதாம். அத்திருவருள் ஞான உபதேசத்தைக் கொண்டு யோகம் புரிந்து சிவபோகத்தை நுகர இப்பொழுது முயல்கின்றேன் என்ற கருத்துப் புலப்பட, “இது தருணம் திறந்து அதனை எடுக்க முயலுகின்றேன்” என அவ்வுருவக வாய்பாட்டிலேயே உரைத் தருளுகின்றார். அட்டிசெயல் - தடை செயல். தடை உண்டாயின் முயற்சி கலக்கமுற்று வீழ்ந்தொழியின் யான் உயிர் வாழேன் என்பார், “அட்டி செய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்” என்று கூறுகின்றார். என் முயற்சி முற்றுதற்கு அரைக்கண நேரம் தாமதித்தாலும் சிவபோக நுகர்ச்சியினை நெடிது பற்றிப் பெரிதும் நுகர்வேன் எனப் போக நுகர்ச்சியின் பெருமை தோற்றுவித்தற்கு, “அரைக்கணத்துக்கு ஆயிரமாயிரம் கோடியாக வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவேன்” என்றும், இதனை நும் மேல் ஆணையாக யுரைக்கின்றேன் என வற்புறுத்துவாராய், “நும் ஆணை” என்றும், “விரைந்து வந்து அருள்வீர்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், சிவபோகத்திற்குரிய நெறியாகிய சிவயோகத்திற்கு வேண்டப்படும் திருவருள் ஞானம் உபதேச வாயிலாகப் பெற்ற திறத்தை வடலூர் வள்ளல் எடுத்துரைத்தவாறாம். (2)
|