பக்கம் எண் :

3782.

     கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே
          காலம்என்ன கணக்கென்ன கருதும்இடம் என்ன
     மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
          விடுவேனோ இன்றடியேன் விழற்கிறைத்தேன் அலவே
     செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
          தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
     மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
          மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.

உரை:

     மை தீட்டிய கண்களை யுடைய அம்மையாகிய சிவகாம வல்லி கண்டு இன்புறுமாறு திருக்கூத்தாடுகின்ற பெருமானே; கைக்கேற்ற பொருள் வாய்த்து அதனை உண்பதற்குத் தக்க வாய்ப்புக் கிடைத்த வழி அதனை யுண்பதற்குக் காலமோ, கணக்கோ, இடமோ வேண்டா என எனக்கு நேர்பட்டு அன்று குருபரம்பரனாய் எழுந்தருளி எனக்கு நீர் உரைத்தது மெய்ம்மை மெய்ம்மையேயாகும்; இனி அதனையுண்ணாது விடேன்; இன்று வரை அது குறித்து அடியவனாகிய யான் வீணில் முயன்றேனில்லை; செயற் பாட்டிற் குகந்த செயல் மேற்கொண்டு சிவபோகத்தை விளைவித்து நுகர்வதற்கே முயன்றுள்ளேன்; அது நோக்கியே நாள்தோறும் காத்திருக்கின்றேன்; இதனைப் பெருமானாகிய நினது திருவுள்ளம் நன்கறியும் அன்றோ. எ.று.

     கைக்கு இசைந்த பொருள் என்பது ஞானாசிரியன் உபதேசித்தருளும் சிவஞானம். சிவஞானப் பயனாகிய சிவபோகத்தை நுகர்வதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது காலம், இடம், அளவு முதலியன நோக்காது நுகர்தல் வேண்டும் என்று அன்று நீவிர் உபதேசித்து அருளியது உண்மையுரை அன்றோ என விளக்குதற்கு, “வாய்க்கு இசைந்து உன்பதற்கே காலமென்ன கணக்கென்ன கருதும் இடமென்ன மெய்க்கிசைந்து அன்று உரைத்தது நீர் சத்தியம் சத்தியமே” என உரைக்கின்றார். நுகர்தற்குரிய சால்பை யுணர்த்துவதற்கு “எனக்கு வாய்க்கிசைந்து உண்பது” எனக் குறிப்பு மொழியால் உரைக்கின்றார். பரம்பொருள் மானிட உருவில் குருமுதல்வனாய் வந்து உரைத்தமை தோன்ற, “மெய்க் கிசைந்து அன்று உரைத்தது” என விளம்புகின்றார். அன்று செய்த உபதேசத்தை விடாமற் கைக்கொண்டு இன்று வரை முயல்கின்றேனே யன்றி வீண் பொழுது போக்குகின்றேனில்லை என்பாராய், “விடுவேனோ இன்று அடியேன் விழற் கிறைத்தேன் அலவே” என விளம்புகின்றார். வீண் செயல் புரிவதை “விழற்கு இறைத்தல்” என்பது உலகோர் பழமொழி. சிவஞானச் சிவயோக முயற்சிகளால் சிவபோகம் விழைவது பற்றி, “செய்க் கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்” என்று தெரிவிக்கின்றார். சிவஞானம் பெற்றுச் சிவயோகம் புரிதல் செய்தற்குரிய செயலாதலின் அதனை, “செய்க்கு இசைந்த சிவபோகம்” என்றும், சிவயோக முயற்சியை “இறைத்தேன்” என்றும் விளக்குகின்றார். நாளும் சிவஞான யோகப் பயனாகிய சிவபோகத்தை எதிர்பார்த்த வண்ணம் இருந்தமை புலப்பட, “தினந்தோறும் காத்திருந்தேன்” என்றும், தமது முயற்சியின் மெய்ம்மை விளக்குதற்குத் “திருவுளமே அறியும்” என்றும் தெரிவிக்கின்றார். நெடிது காத்திருக்குமாறு என்னை விடலாகாது என உரைப்பார், “விரைந்து வந்தருள்வீர்” என வேண்டுகிறார்.

     இதனால், சிவயோகமாகிய பயனை விரைந்து அருள் புரியுமாறு வேண்டியவாறாம்.

     (3)