3783. பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர்
பணித்தபின்னோ என்னுடைய பக்குவம்பார்க் கின்றீர்
இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
இவர்பெரியர் இவர்சிறியர் என்னல்வழக் கலவே
உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர்
உடல்பொருள்ஆ விகளைஎலாம் உம்மதெனக் கொண்டீர்
திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகரே.
உரை: சிவகாமவல்லி கண்டு மகிழ ஆடல் புரிகின்ற தலைவரே; உண்ணும் கலத்தில் உணவினைப் படைத்து இதனை உண்க என்று சொல்லிப் பின்னர் அதனை யுண்டற்குரிய பக்குவம் எனக்கு உண்டாவென நோக்குகின்றீர்; இப்பெரிய உலகத்தில் பசித்தவர்க்கு உணவு தந்து அதனைப் போக்க வல்ல பெரியவர்கள், பசித்தவர்களில் இவர் பெரியவர், இவர் சிறியவர் என ஆராய்தல் மரபன்று; தேவரீருடைய திருவருள் ஞான வமுதத்தை யுண்டற்கு அமைந்த உரிமை யுடையவன் நான்; உமக்கே எனது உள்ளம் உரிமை கொண்டது என்பதை அப்பொழுதே தேவரீர் அறிந்திருக்கிறீர்; எனது உடல் பொருள் உயிர் ஆகிய எல்லாவற்றையும் உம்முடையவை எனக் கொண்டிருக்கிறேன்; மனத்தின்கண் திரிபு கொண்டு நான் வருந்துவதைப் பார்த்திருப்பது உமக்கழகாகாது. எ.று.
ஞானாசிரியனாய்ப் போந்து திருவருள் ஞானத்தை உபதேசித்து அதன் வாயிலாகச் சிவபோகத்தைப் பெற்று நுகருமாறு செய்தருளிய திறத்தைக் குறிப்பு மொழியால், “பரிகலத்தே திருவமுதம் படைத்துணவே பணித்தீர்” என்றும், திருவருள் ஞானப் பயிற்சியாகிய சிவயோகத்துட் புகுந்தபோது யோகமும் போகமும் எய்துதற்குக் காலம் தாழ்க்கின்றமை புலப்படக் குறிப்பு வாய்பாட்டிலேயே, “பணித்தபின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர்” என்றும் உரைக்கின்றார். பசித்தவர்க்கு உணவளிக்கும் பண்புடைய நன்மக்கள் பசித்தவரை அமர்வித்துப் பரிகலமிட்டு உணவு பரிமாறிய பின் அவர்களில் பெருமை சிறுமை யுடையவர்களைக் கண்டறிவது உலகியல்பன்று; இதனை எடுத்தோதித் தமக்குத் திருவருள் ஞானமாகிய அமுதத்தை வழங்குவதில் பக்குவம் உடைமை இன்மைகளை நோக்கலாகாது என வற்புறுத்துகின்றவர், “இருநிலத்தே பசித்தவர்க்குப் பசி நீக்க வல்லார் இவர் பெரியவர் இவர் சிறியர் என்னல் வழக்கலவே” என்று இயம்புகின்றார். தமக்கு அத்திருவருள் ஞானமாகிய அமுதத்தைப் பெற்று உண்பதற்கேற்ற பக்குவமும் தகுதியும் உண்டென்பார், “உரிமை யுற்றேன்” என்றும் உம்முடைய திருவருளின் தொடர்பு உற்ற பொழுதே என் உள்ளம் உம்முடைய திருவடியின்பால் பொருந்திய நிலைமையைத் தேவரீர் அறிந்திருக்கின்றீர்; அக்காலத்தேயே என் உடல் பொருள் ஆவி மூன்றையும் நீ ஏன்று கொண்டாய் என முறையிடுவார், “என் உள்ளம் அன்றே அறிந்தீர்; உடல் பொருள் ஆவிகளை எலாம் உமதெனக் கொண்டீர்” என்றும் கூறுகின்றார். “அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாம் குன்றே யனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ” (குழைத்த) என மணிவாசகப் பெருமான் உரைப்பது காண்க. ஞானப் பேறு எய்துதற்குக் காலம் தாமதிப்பதால் மனவமைதி குன்றி வருந்துவது விளங்க, “திரிவகத்தே நான் வருந்தப் பார்த்திருத்தல் அழகோ” என்று முறையிடுகின்றார். அகத்தே திரிபுற்று வருத்த முறுவதைத் “திரிவகத்தே நான் வருந்த” என்று குறிக்கின்றார்.
இதனால், திருவருள் ஞானத்தை நல்கிய பெருமான் அதன் வாயிலாகச் சிவயோக போகத்தை நுகர்தற்கு எழும் உள்ளத்தின் விரைவைப் புலப்படுத்தவாறாம். (4)
|