பக்கம் எண் :

3784.

     பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே
          பொன்மணிமே டையில்ஏறிப் புந்திமகிழ்ந் திருக்கக்
     கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத
          கால்இரண்டும் கொடுத்தீர்எக் காலும்அழியாத
     மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர்
          மேல்ஏறி னேன் இனிக்கீழ் விழைந்திறங்கேன் என்றும்
     மைகொடுத்த விழிஅம்மை சிவகாமவல்லி
          மகிழநடம் புரிகின்றீர் வந்தருள்வீர் விரைந்தே.

உரை:

      மை தீட்டிய கண்களையுடைய தேவியாகிய சிவகாமவல்லி நேரில் கண்டு மகிழத் திருக்கூத்தாடுகின்ற பெருமானே; பொய்யறிவை விளைவிக்கின்ற மனத்திடைப் படரும் மாயையாகிய சேற்றில் விழாதபடி பொன்னாலும் மணியாலுமாகிய மேடை மேல் ஏறி மனம் மகிழ்ச்சியோடு இருக்குமாறு எனக்குத் திருவருள் ஞானம் தந்து உதவினீர்; இனி அது கொண்டு யான் ஞானவான்களின் சூழல்கள் எங்கும் சென்று கண்டு இன்புறுதற்குத் தளராத கால் இரண்டையும் கொடுத்தருளியுள்ளீர்; அதனால் எக்காலத்தும் அழியாத மெய்யுணர்வைத் தந்தருளுதல் வேண்டும்; அதனைப் பெறும் வரையில் உமது தொடர்பை விடமாட்டேன்; ஞான நெறியில் மேனிலை அடைந்த யான் இனிமேல் கீழ் நிலையாகிய உலகியல் வாழ்வை என்றும் விரும்பி இறங்க மாட்டேன்; ஆதலால் காலம் தாழ்த்தாது என்பால் வந்து அத்திருவருள் ஞான விளக்கத்தைத் தந்தருள்வீராக. எ.று.

     மங்கல மகளிர் கண்களில் மை தீட்டிக் கொள்ளுதல் மரபாதலின் உமாதேவியை, “மை கொடுத்த விழி யம்மை” என்று சிறப்பிக்கின்றார். மாணிக்கவாசகரும் “மையார் தடங்கண் மடந்தை” (எம்பாவை) என்று கூறுதல் காண்க. உலகியல் வாழ்வில் மனத்தின்கண் படியும் மாயையால் பொய் நினைவும், பொய் ஒழுக்கமும் உளவாதலின், “பொய் கொடுத்த மனமாயை” எனவும், சேற்றில் விழுந்தவர் எளிதில் ஏறமாட்டாது மேனி முழுதும் மாசு பட்டு வருந்துவது போல உலகியல் மாயையில் அழுந்தினவர் மனம் மாசுற்று வருந்துதல் பற்றி, “மாயைச் சேற்றில் விழாது” எனவும், ஞான நெறியில் நின்று இன்புற்று இருத்தல் வேண்டித் திருவருள் ஞானம் நல்கப்படுவது விளங்க, “பொன் மணி மேடையில் ஏறிப் புந்தி மகிழ்ந்திருக்கக் கைகொடுத்தீர்” எனவும் புகல்கின்றார். பொன் மணி மேடை என்றது திருவருள் ஞானம் கை வந்த நிலையை. திருவருள் ஞானம், சிதாகாசம் எனவும், திருச்சிற்றம்பலம் எனவும் சான்றோரால் புகழப்படுதலின், அந்த அம்பலத்தைப் “பொன் மணி மேடை” எனக் குறிப்பு மொழியால் தெரிவிக்கின்றார். சிவஞானப்பேற்றால் மேனிலை யுற்ற வடலூர் வள்ளல், தாம் பெற்ற ஞானம், அல்லாதார் கூட்டத்தால் கெடாமை வேண்டி ஞானவான்களின் கூட்டத்தையே விரும்பிச் சென்றடையும் செயலுடையராதல் புலப்பட, “உலகமெலாம் களிக்க உலவாத கால் இரண்டும் கொடுத்தீர்” எனவும், வாதனை வயத்தால் அஞ்ஞானிகளின் கூட்டம் உண்டாயினும் தாம் பெற்ற திருவருட் சிவஞானம் கெடாது விளக்கமுறுதல் வேண்டும் என்பார், “எக்காலும் அழியாத மெய் கொடுக்க வேண்டும்” எனவும் இயம்புகின்றார். உலவாத கால் - நடையில் தளர்ச்சி யுறாத கால். மெய் என்றது சிவஞானமாகிய மெய்யுணர்வை. கால் இரண்டும் என்பதற்கு உட்சுவாசம், வெளிச்சுவாசம் ஆகிய இரண்டு எனவும், அழியாத மெய்கொடுக்க வேண்டும் என்பதற்குச் 'சாகா உடம்பு' எனவும் கூறுவோர் உண்டு. சிவஞானத்தைத் தந்து மேனிலை யின்பத்தில் இருத்தினீராதலால், இனி யாம் உமது நெறியினின்றும் பிரியேன் என வலியுறுத்தற்கு, “உமை விட மாட்டேன் கண்டீர்” எனவும், “மேல் ஏறினேன் இனிக் கீழ் விழைந்து இறங்கேன்” எனவும் கூறுகின்றார். மனத் தடுமாற்றம் உளவாகாமைப் பொருட்டு “விரைந்து வந்தருள்வீர்” என்று விளம்புகின்றார்.

     இதனால், சிவஞானப் பேறு எய்தினமையால் உண்டாகிய நலம் உரைத்தவாறு.

     (5)