31. உண்மை கூறல்
அஃதாவது, உள்ளத்தின் உண்மைத் தன்மையை எடுத்துரைத்தல் உட்கோள் உரைத்தல் எனினும் அமையும்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3790. தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன்
தந்தைய ரேபெருந் தயவுடை யவரே
பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம்
பார்வதி புரஞானப் பதிசிதம் பரரே
இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா
இறையவ ரேஉமை இங்குகண் டல்லால்
அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
உரை: ஒப்பற்ற பெரிய தலைவரே; எங்கட்குத் தாயும் தந்தையுமானவரே; மிக்க பெருந் தயவு நிறைந்தவரே; அச்சம் நீக்கி என்னை ஆண்டுகொண்ட பரம்பொருளே; பார்வதி புரம் என்னும் ஞானப் பதியாகிய சிதம்பரத்தை உடையவரே; இறைவனே; உம்மை இங்குத் தரிசித்தல்லது நிலையில்லாத உலகியலைக் கண்ணெடுத்துப் பார்க்கமாட்டேன்; இனிச் சிறிது பொழுதும் தாமதமின்றி அருள் செய்தல் வேண்டும்; அருட்பெருஞ்சோதி வடிவுடைய பெருமானாகிய உம்மீது ஆணையாக இதனை மொழிகின்றேன். எ.று.
உலகனைத்திற்கும் ஒப்பற்ற தலைவராதலால் சிவபெருமானைத் “தனிப் பெருந் தலைவரே” என்று சொல்லுகின்றார். தலையளித்தலில் தாய் போலவும், ஞானம் வழங்குதலால் தந்தை போலவும் உள்ளமை பற்றிச் சிவனை, “தாயவரே என் தந்தையரே” என்று மொழிகின்றார். அருளே உருவாகியவனாதலால், “பெருந் தயவுடையவரே” என்று புகல்கின்றார். பனிப்பு - அச்சம்; நடுக்கமுமாம். உலகியல் துன்பங்களை நோக்கி அஞ்சிக் கிடந்த தமக்குச் சிவஞானம் தந்து ஆண்டு கொண்டமையின், “பனிப்பறுத்து எனை ஆண்ட பரம்பரரே” என்று பகர்கின்றார். பரம்பரன் - எல்லாவுலகுக்கும் எல்லாத் தெய்வங்கட்கும் மேலான முதல்வன். வடலூர்க்குப் பார்வதி புரம் என்றும் பெயர் வழங்குதலால் அங்குள்ள கூத்தப்பெருமானை, “பார்வதி புர ஞானப் பதி சிதம்பரரே” என்று சிறப்பிக்கின்றார். சிதம்பரர் - சிதம்பரத்தையுடையவர். சிதம்பரம் என்பது சித் அம்பரமெனப் பிரிந்து ஞான ஆகாசம் எனப் பொருள்படும். ஞானப் பதியாகிய சிதம்பரத்தையுடையவர் என்பது சொற் பிரித்தல் விரித்தல். பார்வதி புரமாகிய ஞானப் பதியின்கண் கூத்தப்பெருமானாகிய உம்மைக் கண் குளிரக் கண்டு தெளிவடைந்தாலன்றி நிலையில்லாத உலகியல் இன்பங்களை நோக்கமாட்டேன் என வற்புறுத்துவாராய், “உமை இங்கு கண்டல்லால் அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன்” என உறுதிப்பட உரைக்கின்றார். கண்டு தெளிவுற வேண்டின் இறைவனே அருள்கூர்ந்து காட்சி நல்க வேண்டுதலால் அதனைத் தாமதமின்றி அருளுக என்பாராய் “இனிச் சிறு பொழுதேனும் தாழ்த்திடல் வேண்டா” எனச் சாற்றுகின்றார். அனிச்சய உலகு - நிலையில்லாத உலகியல் இன்பம். பார்க்கவும் மாட்டேன் என்னும் உறுதி மொழியை மேலும் வற்புறுத்தற்கு, “ஆணை நும் மீதே” என அறிவிக்கின்றார். அருட் பெருஞ்சோதியீர் திருவருளாகிய பேரொளியை யுடையவரே என்று பொருள்படும் செம்மை மொழி.
இதனால், வடலூராகிய ஞானப் பதியின்கண் கூத்தப் பெருமானாகிய சிதம்பரேசரைக் கண்டன்றி உலகியல் நல்கும் காட்சி இன்பங்களைக் காண மாட்டேன் என வடலூர் வள்ளல் தமது உட்கோளைக் கூறியவாறாம். (1)
|