பக்கம் எண் :

3795.

     என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம்
          ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர்
     இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர்
          என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே
     வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்
          வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால்
     அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்
          அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

உரை:

     திருவருளாகிய பெருஞ் சோதியை யுடையவரே; அருள் வள்ளலே; என் உடல், பொருள், உயிர் ஆகிய எல்லாவற்றையும் உமக்கே உரிமை செய்து தந்துள்ளேன்; எங்கள் பெருமானாகிய நீரும் அவற்றை மகிழ்வோடு வாங்கிக் கொண்டு என்னை ஆளாகக் கொண்டு விட்டீர்; இனி எனக்கு என்னுடைய செயல் என ஒன்றுமில்லை; செய்வன யாவையும் நும்முடைய செயலேயாகும்; வன்மனத்தோடு நிற்பவரல்லராதலின் நீர் எனது எலும்போடு கூடிய என் உடலில் கலந்து கொண்டீர்; அருள் வள்ளலாகிய நும்முடைய சிவஞானத் திருவருளைக் கண்டன்றி அன்புருவாய்ப் போந்து என்னைக் காண வருபவரையும் முற்பட வரவேற்க மாட்டேன்; இது உன் மேல் ஆணையாகச் சொல்வதாகும். எ.று.

     சிவன்பால் அன்பு தோன்றிய பொழுதே தம்மை முழுதும் அப் பெருமானுக்கே உரிமை செய்து விட்டபடியால், “என் பொருள் என்னுடல் என்னுயிர் எல்லாம் உம்மிடத்து ஈந்தனன்” என்றும், உயிருணர்வு உடலுணர்வு எல்லாம் தமக்குச் சிவ நினைவாகவும் செயலாகவும் இருத்தலின், “எம்பெருமான் நீர் இன்பொடு வாங்கிக் கொண்டு என்னை ஆட்கொண்டீர்” என்றும் இயம்புகின்றார். இவ்வாற்றால் தம்முடைய நினைவும் சொல்லும் செயலும் பலவும் சிவ மயமாய் நிலவுதலை யுணர்ந்து உரைத்தலின், “என் செயல் ஒன்றிலை யாவும் நும் செயலே” என்று உரைக்கின்றார். அருளே திருவுருவாய்த் தம் உடலிடத்தே சிவ பரம்பொருள் கலந்து நிற்றலை உணர்கின்றாராதலால், சிவனை நோக்கி, “வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர்” என்று கூறுகின்றார். அன்பு நிறைந்த உள்ளமும் செயலும்கொண்டு தம்மைக் காண வருபவர்க்கு முதலிடம் தந்து பின்னர் பிறரைக் காண்பது உலகியல் அறமாயினும், யான் அதனை விரும்பாமல் உம்முடைய ஞான நல்வரவுக்கே சிறப்பிடம் தந்து போற்றுகின்றேன் என்பாராய், “வள்ளலே நும் திருவரவு கண்டல்லால் அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன்” என்றும், இதனை யாப்புறுத்தற்கு “ஆணை நும்மீதே” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், வடலூர் வள்ளல் தமது உடல் பொருள் உயிர் மூன்றையும் சிவனுக்கு உரிமை செய்து அவருடைய திருவருள் வரவை நோக்கியிருக்கும் ஆர்வம் விளங்கத் தெரிவித்தவாறாம்.

     (6)