பக்கம் எண் :

3798.

     மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே
          மாலையும் காலையும் மத்தியா னத்தும்
     கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற்
          காலையி னுந்தந்தென் கடும்பசி தீர்த்து
     எடுக்குநற் றாயொடும் அணைந்துநிற் கின்றீர்
          இறையவ ரேஉம்மை இங்குகண் டல்லால்
     அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன்
          அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.

உரை:

     திருவருளாகிய பெரிய ஒளி யுருவாகிய பெருமானே; காலை, மாலை, நண்பகல், இரவு, நடுயாமம், விடியற் போது ஆகிய இக்காலங்களில் என் மிக்க பசி யறிந்து உணவளித்துப் போக்கிக் கைகளில் எடுத்தணைக்கும் தாய்க் கொப்பாக நுமது பேரருள் ஞானமாகிய தண்ணிய அமுதத்தை யான் உண்ணவளித்து விளங்குகின்றீர்; இறைவனாகிய உம்மை இப் பிறப்பில் இவ்வுலகில் கண் குளிரக் கண்டாலன்றி இடையினின்றும் நெகிழ்ந்து வீழும் உடையையும் உடன் எடுத்து உடுக்கமாட்டேன்; இது நும் மேல் ஆணை. எ.று.

     பெற்ற தாய் தன் குழவியின் பசியை எண்ணி மாலை காலை முதலிய ஆறு பொழுதினும் பாலுணவு தந்து அதன் மிக்க பசியைத் தீர்த்து ஆதரிப்பது உலகியலில் கண்ட உண்மை. அது போலவே இறைவனும் தமக்குத் திருவருள் ஞானமாகிய அமுதத்தைப் பொழுதறிந்து தந்தருளிப் பேணுகின்றார் என்பாராய், “மடுக்க நும் பேரருள் தண்ணமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் கடுக்குறும் இரவினும் யாமத்தும் விடியற் காலையினும் தந்து என் கடும்பசி தீர்த்து எடுக்கு நற்றாயொடும் இணைந்து நிற்கின்றீர்” எனக் கூறுகின்றார். மடுத்தல் - உண்ணல். கூடுதல் - மிகுதல். இணைதல் - ஒத்தல். காணாவிடில் - மான வுணர்வின்றி உடுக்கும் உடையையும் எடுத்துடுத்துக் கொள்வதன்றி அலைவேன் என்பாராய், “உம்மை இங்கு கண்டு அல்லால் அடுக்கு அவிழ் கலை எடுத்துடுக்கவும் மாட்டேன்” என உரைக்கின்றார்.

     இதனால், திருவருள் ஞான வமுதம் பெற்று வாழும் நான் உமைக் கண்டாலன்றி நெகிழும் உடையையும் எடுத்தணிய மாட்டேன் என முறையிட்டவாறாம்.

     (9)