3799. கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற
காலை தென்றே கருத்துள் அறிந்தேன்
நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி
நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்
செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர்
சிற்சபை யீர்எனைச் சேர்ந்திடல் வேண்டும்
அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன்
அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே.
உரை: தன்னை அடைந்தார்க்கு அளந்தறிந்து உரைக்கின்ற பல வகையான நேர்மை உரைகளைப் பேசாமல் நெடிய ஒளி பொருந்திய அழகிய அம்பலத்தின்கண் கூத்தாடுதலைச் செய்கின்ற பெருமானே; வெறுத்துப் பேசுகின்றவர் அறிந்து கொள்ளுதற்கு அரியவரே; ஞான சபையை யுடையவரே; அருட் பெருஞ் சோதி யுருவாகிய தலைவரே; வெகுண்டு பேசுகின்றவர்களும் மகிழ்ந்து உரையாடுகின்ற நற்பொழுது இதுவா மென்று மனதால் அறிந்து உரைக்கின்றேனாதலால், என்பால் இப்பொழுது போந்து அருள் புரிய வேண்டுகிறேன்; இனி நான் பொறுக்க முடியாது என்பதை அறுதியிட்டுக் கூறிகின்றேன்; மேலும் இது நும் மேல் ஆணையாக உரைப்பதாகும். எ.று.
நிறுத்துரைத்தல் - தகுதி யறிந்து வேண்டுவன உரைத்தும் செய்தும் அருள் செய்கின்ற செயல்களை விடுத்து அம்பலத்தின்கண் நின்று ஆடல் புரிவதை வியந்து புகழ்கின்றாராதலால், “நிறுத்துரைக்கின்ற பல்நேர்மைகள் இன்றி நீடொளிப் பொற்பொது நாடகம் புரிவீர்” என மொழிகின்றார். நெடுந்தூரம் பரந்து ஒளிர்தலின் பேரொளி யுடைய அம்பலத்தை, “நடு ஒளிப் பொற் பொது” எனப் பாராட்டுகின்றார். செறுத்துரைக்கின்றவர் - நெஞ்சில் வெறுப்புற்றுப் பேசுபவர். மனத்தின்கண் வெறுப்புணர்வு நிலவும்போது உண்மையை யுணரும் திறம் கெட்டொழிதலால், “செறுத்து உரைக்கின்றவர் தேர்வதற்கு அரியீர்” என்று போற்றுகின்றார். சிற்சபை - ஞானசபை. கறுத்து உரைக்கின்றவர் - சினந்து பேசுகின்றவர். கணந்தோறும் மாறுகின்ற குண வேற்றுமையால் சினம் முதலிய குற்றங்கள் தோன்றுதலின், “கறுத்து உரைக்கின்றவர் களித்து உரைக்கின்ற காலை” என்று காலத்தின் இயல்பு விளங்க உரைக்கின்றார். அறுத்து உரைத்தல் - அறுதியிட்டுப் பேசுதல்.
இதனால், காலத்தின் இயல்பறிந்து திருவருள் ஞானத்தை வழங்கத் தம்முன் போந்தருள வேண்டும் என இறைவன்பால் வடலூர் வள்ளல் முறையிட்டவாறாம். (10)
|