பக்கம் எண் :

3801.

     ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா
          அரைக்கணமும் நினைப்பிரிந்தே இனித்தரிக்க மாட்டேன்
     கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும்
          குறும்புமொழி செவிகள்உறக் கொண்டிடவும் மாட்டேன்
     ஊனைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான்
          உவந்துவராய் எனில்என்றன் உயிரையும்விட் டிடுவேன்
     மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது
          மனம்அறிவாய் இனம்உனக்கு வகுத்துரைப்ப தென்னே.

உரை:

     மாண்புடைய மணிகள் இழைத்த அம்பலத்தில் ஆடல் புரிகின்ற அருள் வள்ளலே; உமது திருவருள் ஞானச் சூழலில் நின்று அரைக்கண நேரமும் யான் இனிமேல் பிரிந்து தரித்திருக்க மாட்டேனாகின்றேன்; தீய நெறியினை யுடைய உலகத்தவர் பேசுவதை இன்றுவரை கேட்டதுபோல் இனிமேலும் அவர்களுடைய குறும்பு மொழிகளை என் செவிகள் பொருந்தக் கேட்டுக்கொண்டிருக்க மாட்டேன்; உண்டி உறக்கங்களையும் நான் இனி விட்டொழிக்கின்றேன்; நீயும் மனமகிழ்ந்து என்பால் வாராயாயின், என் உயிரையும் விடத் துணிந்துள்ளேன்; என்னுடைய மனவியல்பையும் நீ நன்கறிவாயாதலால் இன்னமும் உனக்கு என் துன்பங்களை வகுத்துரைப்பது என்ன பயனைச் செய்வதாம். இதனையும் உன் மேல் ஆணையாக உரைக்கின்றேன். எ.று.

     மாண்பு என்னும் சொல் “மாணை” என வந்தது. மணிப் பொது, மணிகள் இழைத்த பொன்னம்பலம். அம்பலத்தில் ஆடல் புரிவதும் இறைவன் அருட் செயலாதலின், “நடஞ்செய் வள்ளால்” என நவில்கின்றார். திருவருட் சூழலில் நின்று அரை நொடிப்பொழுது பிரியினும், உலகியல் மாயை படர்ந்து அறிவை மயக்கித் திருவருட்கு மாறாய நெறியில் செலுத்துதலின், “அரைக்கணமும் நினைப் பிரிந்தே இனித் தரிக்க மாட்டேன்” எனவும், உயிர் உணர்வோடு இருக்கும்போது உலகத்தவர் பேசும் பேச்சுக்களைக் கேட்டு மனம் மாயை மயக்கிற்கு இரையாதலின், “கோணை நிலத்தவர் பேசக் கேட்டதுபோல் இன்னும் குறும்பு மொழி செவிகளுறக் கொண்டிடவும் மாட்டேன்” எனவும், ஊணும் உறக்கமும் உடலோம்பற்கு உறவாய் உலகியல் மாயையின்கண் செலுத்துதலின், “ஊணை உறக்கத்தையும் நான் விடுகின்றேன்” எனவும் உரைக்கின்றார். கோணை நிலத்தவர் - நேர்மை நெறியினின்றும் பிறழ்ந்து நிலவும் உலகியல் மக்கள். அவர்கள் பேசுவன பலவும் குறும்பு விளைவிக்கும் தீய மொழிகளாதலின் அவற்றைக் கேட்பதும் குற்றமாம் என்பது பற்றி, “இன்னும் குறும்பு மொழி செவிகளுறக் கொண்டிடவும் மாட்டேன்” என்று கூறுகின்றார். கேள்வியறிவு தோன்றியது முதல் உலகினர் பேசும் பேச்சுக்களைக் கேட்டுப் பயின்றவராதலின், “நிலத்தவர் பேசக் கேட்டவர் போல்” எனக் கிளந்து ஓதுகின்றார். குறும்பு மொழி - பயனில் சொற்கள். துன்பம் விளைவிக்கும் சொற்கள் எனினும் அமையும். உறக்கத்தையும் என வந்த உம்மையும், ஊணையும் என விரித்துக் கொள்க. என் வேண்டுகோட்கு இசைந்து மனமகிழ்ந்து வந்தருள வேண்டும் என்றற்கு, “உவந்து, வாராய் எனில்” என்று மொழிகின்றார். உயிரையும் விட்டிடுவேன் என்பது உறுதி குறித்து நின்றது. வேண்டுவார் மனப் பண்பறிந்து வேண்டுவன நல்குவது இறைவனது அருள் நெறியாதலின், “எனது மனம் அறிவாய்” என்றும், மனத்தால் வரும் துன்பங்களையும் சொல்லால் வருந்துன்பங்களையும் உடம்பால் வரும் துன்பங்களையும் வகை செய்து விரித்துரைப்பது முறையிடுவார் செயலாதலின், “இன்னம் உனக்கு வகுத்துரைப்பது என்னே” எனக் கூறுகின்றார். எல்லாம் அறிந்துள்ள உனக்கு இன்னமும் விரித்துரைப்பது வேண்டா என்றற்கு, “இன்னம் உனக்கு வகுத்துரைப்பது என்னை” என்று கூறுகின்றார். ஆணை நும் மேல், ஆணை நும் மேல் என அடுக்கி உரைத்தது வன்புறை.

     இதனால், அருள் வழங்க இறைவன் வாரானாயின் உயிர் விடுதல் உறுதி என எடுத்தோதியவாறாம்.

     (2)