33. சிவ தரிசனம்
அஃதாவது, சிவதரிசனம் பெறுவது குறித்துச் சிவபெருமானை வேண்டுவதாகும். இங்கே சிவம் என்பது திருவருள் ஞானத்தின் மேற்று. அருள் ஞான வடிவமான சிவத்தைத் திருவருள் என்றும், திருவருள் ஞானம் என்றும், ஞானமானது ஒளி மயமாவது பற்றி அருட் சோதி என்றும் வடலூர் வள்ளற் பெருமானால் குறித்தருளப் பெறுவதால் சிவஞானமாகிய அருட் சோதியைத் தம்பாற் போந்து வழங்கி அருளுமாறு இதன்கண் பாட்டுத் தோறும் வேண்டுகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3811. திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
அப்பாலும் ஆய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.
உரை: சிவஞானமாகிய செல்வத்தை யுடைய பெருமானே! ஞான சபையில் வாழ்கின்ற பதிப் பொருளாகிய சிவனே! எத்தகைய செயலையும் செய்ய வல்ல ஒப்பற்ற தலைமை நலம் பொருந்திய ஞானிகளின் முடிமணியாக விளங்குபவனே! உருவுடைய என்னுடைய உயிர்க்குயிராய் விளங்குகின்ற ஒளிப் பொருளே! நினைக்கும் தோறும் என் சிந்தையின்கண் சுரந்து பெருகுகின்ற அமுதமானவனே! அருவாகிய பெருவெளியாய் அது நிலவுகின்ற தத்துவாதீதப் பரவெளியாய் அதற்கப்பாலுமாய் எங்கும் நிறைந்து ஒளிரும் அருட் பெருஞ் சோதியையுடைய ஐயனே! ஞான மணம் கமழும் சிவகாமவல்லியின் மணவாளனே! என்பால் போந்தருளி அருட் சோதியாகிய சிவஞானத்தை எனக்கு விரைந்து தந்தருள்க. எ.று.
சிவஞானமாகிய திருவருட் செல்வத்தை உடையனாதல் பற்றிச் சிவபெருமானை, “திருவுடையாய்” என்றும், ஞான சபையின்கண் நின்று உலகுயிர்களுக்கு மங்கலமும் இன்பமும் நல்குவதால், “சிற்சபைவாழ் சிவபதியே” என்றும் இயம்புகிறார். வரம்பிலாற்றலுடைய பெருமானாகியும், எல்லா வுலகங்களுக்கும் தேவ தேவர்களுக்கும் உயர்வற வுயர்ந்த தலைவனாகியும், பேராற்றல் படைத்த சிவ ஞானிகளுக்கு முடிமணியாகவும் விளங்குவதால், “எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்தசிகாமணியே” என்று பாராட்டுகின்றார். அருவுருவானதால் உயிரை 'உருவுடைய என்னுயிர்' என்றும், உயிர்க்குயிராய் நல்லுணர்வாகிய ஒளி தந்து வாழ்விப்பது பற்றி “உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே” என்றும் ஓதுகின்றார். சிந்திப்பார் சிந்திக்கும் தோறும் அவர் சிந்தையின் கண் தேனாய் ஊறி இன்புறுத்துவது கொண்டு “உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே” என்று பராவுகின்றார். சிவ பரம்பொருள் நின்று விளங்குகின்ற ஞானப் பெருவெளி உருவமில்லாத ஞானாகாசப் பெருவெளியாதலால், “அருவுடைய பெருவெளியாய்” எனவும், அப்பெருவெளி விளக்கம் பெறுகின்ற ஆகாசம் தத்துவாதீதப் பெருவெளியாதலால் அதனை, “அது விளங்கு வெளியாய்” எனவும், தத்துவாதீதப் பெருவெளிக்கும் சிதாகாசப் பெருவெளிக்கும் இடைப்பட்ட பெருவெளியை “அப்பால்” என்று குறித்து அதனூடும் சிவப் பேரொளி திகழ்வது புலப்பட, “அப்பாலுமாய்” எனவும், இப்பெருவெளிகள் எங்கும் நீக்கமற நிறைந்தருளுவது பற்றி, “நிறைந்த அருட் பெருஞ் சோதியனே” எனவும் போற்றுகின்றார். “அப்பாலுக் கப்பாலுக் கப்பாலானை ஆருரில் கண்டு அடியேன் அயர்ந்தவாறே” என்றும், “அப்பாலுக் கப்பாலை பாடுதுங் காண் அம்மானை” என்றும் சான்றோர் உரைப்பது காண்க. “இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவரிதாகிய சிவபரம்பொருளை” அந்நிலையில் வைத்து இதுவரை பாராட்டிய வடலூர் வள்ளல் உருவுடைய சிவமும் தேவியுமாக வைத்துப் போற்றுகின்றாராதலால், “மருவுடையாள் சிவகாமவல்லி மணவாளா” என்று புகழுகின்றார். சிவகாம வல்லியாகிய உமாதேவி ஞான மணம் கமழும் திருமேனி யுடையவள் என்பது பற்றி அப்பெருமாட்டியை “மருவுடையாள்” என்று சிறப்பிக்கின்றார். அருள் உருவாகிய உமாதேவியின் திருவருளைப் பெற்றாலன்றிச் சிவஞானமாகிய திருவருள் எய்தப் பெறுவது அரிதாகலின், சிவகாமவல்லியை எடுத்தோதி வணங்குகின்றார். எங்கும் எல்லாப் பொருளிலும் அருவமாய் ஒன்றாய்க் கலந்திருக்கின்றானாதலின், தனக்கு முன்னிலைப் பொருளாக எழுந்தருளித் திருவருள் ஞானமாகிய அருட் சோதியை நல்குதல் வேண்டும் என விண்ணப்பிப்பாராய், “வந்தருள்க அருட் சோதி தந்தருள்க விரைந்தே” என்று முறையிடுகின்றார். கணந்தோறும் மாறுகின்ற இயல்புடைய முக்குண வயப்பட்டிருத்தலின் மறதி தோன்றி மயக்குவதற் கஞ்சி “விரைந்து” என்று குறிக்கின்றார்.
இதனால், முக்குண வயப்பட்டுக் கணந்தோறும் மயங்கி மாறுபடும் தமக்கு அருட் சோதியை விரைந்து வழங்கி யருள வேண்டும் என வடலூர் வள்ளல் முறையிட்டவாறாம். (1)
|