பக்கம் எண் :

3812.

     சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
          தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
     நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
          நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
     அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
          ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
     வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
          மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.

உரை:

     சொல்லும் பொருளுமாகிய பெருமானே! துரியாவத்தைக்கண் ஆன்ம ஞானத்தில் காட்சி தருபவனே! தூய்மையும் தூய அன்பும் பொருந்திய ஞானவொளி யுருவாகிய சிவனே! நன்மையே செய்பவனே! அழியாத ஞானச் செல்வமே! ஞான சபையின்கண் விளங்குகின்ற தலைவனே! எல்லா வுலக உயிர்களுக்கும் நாயகமாகவும் தாயகமாகவும் நண்பனாகவும் விளங்குபவனே! எல்லாப் பொருளுமானவனும் அல்லாதவனுமாய் எவ்வுயிர்க்கும் அம்மையும் அப்பனுமாய் விளங்குபவனே! என்னை ஆண்டு கொண்டவனே! அம்பலத்தில் ஆடுபவனே! அருள் ஞானத்தை வழங்கும் குருமுதல்வனே! எல்லாம் வல்ல பெருமானே! சிவகாமவல்லிக்கு மணவாளனே! எல்லா வுலகங்கட்கும் மன்னவனே! என்னை யுடையவனே! என்பால் விரைந்து வந்து அருட் சோதியின்பத்தைத் தந்தருள்க. எ.று.

     நினைப்பார் நினைவின்கண் நீக்கமற நின்று நினைவு வழித் தோன்றுகின்ற சொல்லும் பொருளுமாய்ச் சிவபரம்பொருள் திகழ்கின்றது என்பது பற்றிச் சிவனை, “சொல்லவனே பொருளவனே” என்று சுட்டிக் கூறுகின்றார். துரிய பதம் புருவ நடுவாகிய சாக்கிரத்தானத்தையும், கண்டமாகிய சொப்பனத்தானத்தையும், இதயமாகிய சுழுத்தித்தானத்தையும் கடந்து உந்தியாகிய துரியதானத்தில் இருந்து ஆன்ம ஞானத்தால் யோக நெறியில் காண்கின்ற சிவயோகிகளுக்குக் காட்சி தருவது பற்றிச் சிவபெருமானை, “துரிய பதத்தவனே” என்று கூறுகின்றார். தூய்மையே வடிவமாக இருப்பதினால் சிவனை, “தூயவனே” என்றும், அன்பே உருவமாக யிருப்பதால், “நேயவனே” என்றும், ஞானப் பேரொளியாக விளங்குவது பற்றி, “சோதி உருவவனே” என்றும் போற்றுகின்றார். நன்மையே புரிவது பற்றி, “நல்லவனே” எனவும், அடியார்களுக்கு நிலைத்த செல்வமாய் இன்ப வாழ்வு நல்குவது பற்றி, “நன்னிதியே” எனவும், ஞான சபையின்கண் தனிப் பெருங் கூத்தினை ஆடுவது பற்றி, “ஞான சபாபதியே” எனவும், உயிர் வகைகள் எல்லாவற்றுக்கும் நாயகனாக விளங்குவதால், “நாயகனே” எனவும், எல்லாவுலகங்களையும் படைத்தருளித் தாயாய் நின்று தாங்குவது பற்றி, “தாயகனே” எனவும், ஆன்மாக்களுக்கு நல்லுணர்வு தந்து உய்வித்தலின், “நண்பவனே” எனவும் புகழ்கின்றார். “தாயாகிய உலகங்களை நிலைபேறுசெய் தலைவன்” என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. உலகங்களும் உலகியற் பொருட்களுமாகிய எல்லாமாய் அல்லதுமாய் இலகுவது கருதி, “அனைத்தும் ஆனவனே அல்லவனே” என்றும், உலகுயிர்களை வளர்ப்பவனும் அறிவு தந்து உய்விப்பவனுமாதலால், “அம்மை அப்பா” என்றும், வாழ்வில் உளவாகும் இடர்களிலும் தளர்வுகளிலும் ஊக்கம் குன்றும் நிலையில் நல்லுணர்வு தந்து இனிது உய்ய துணை புரிதலால், “என்னை ஆண்டவனே” என்றும், ஞானிகளின் திருவுள்ளத்தையே ஞானாகாசமாய்க் கொண்டு ஞான நடனம் புரிவதால், “தாண்டவனே” என்றும் துதிக்கின்றார். திருவருள் சிவஞானத்தை உணர்வின்கண் நின்று உணர்த்துவதோடு முன்னிலையில் மக்கள் உருவில் குருவாய் எழுந்தருளி அறிவுரை வழங்குவதால், “அருட் குருவே” எனவும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய எல்லாத் தொழில்களையும் செய்யும் சிவனது வல்லமையை விதந்து, “எல்லாம் வல்லவனே” எனவும் ஏத்துகின்றார். உலகமெல்லாம் கெடினும் தான் கெடாது நின்று அருள் புரிவது பற்றி, “மன்னவனே” என்றும், அடியவனாக ஏற்றுக் கொண்டு அருள்வது பற்றி, “என்னவனே” என்றும் பரவுகின்றார். உமாதேவியை மணந்து கொண்ட பெருமானாதலால், “சிவகாமவல்லி மணவாளா” என்று போற்றுகின்றார். தன்பால் விரைந்து வந்து திருவருள் ஞானத்தை வழங்குக வென வேண்டுகின்றாராதலால், சொல்லவனே என்பது முதல் என்னவனே என்பது ஈறாகப் புகழ்ந்து “வந்தருள்க விரைந்தே” என முறையிடுகின்றார்.

     இதனால், திருவருள் ஞானத்தை விரைந்து போந்து தமக் கருளுக என வடலூர் வள்ளல் சிவபெருமானை வேண்டியவாறாம்.

     (2)