3813. துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.
உரை: துரியாவத்தைக்கண் இருந்து சிவ பரம்பொருளாகிய சிவத்தின் பரமாம் தன்மையை அறிந்து கொண்ட பெரியோர்களாலும் இத்தன்மையது என்று சொல்லுதற்கரிய மெய்ப்பொருளாக விளங்குபவனே; சுத்த சிவானந்தம் நிலவுகின்ற ஞான சபையைக் கண்டுணரும் சித்தர்களின் முடிமணியாக விளங்குபவனே; பெருமை பொருந்திய சிவமாகிய பதிப் பொருளே; உன்னுடைய பெருமையை அறிந்து கொள்ளுவதற்குப் பித்தர்கள் எல்லாரினும் பெரும் பித்தனாகிய யான் பேராசையைக் கொண்டுள்ளேன்; நீல நிறமுடைய மணிகளின் இயல்புகளை அறிய மாட்டாதவனாகிய யான் கண்ணின் மணி போல் விளங்கும் நின்னுடைய அருள் நலங்களைக் காண வல்லவனாவேனோ? ஆதலால் பெறுதற்கரிய பெருமை மிக்க பரம்பொருளாகிய உன்னுடைய திருவருள் ஞான ஒளியை எனக்குத் தந்தருள்வாயாயின் உன்னுடைய அருட் பெருஞ் சோதி நலத்தை அறிந்து கொள்வேனாவேன்; ஆதலால் என்பால் விரைந்து வந்து அளித்தருளுக. எ.று.
துரியத்தின்கண் நின்று யோகக் கண் கொண்டு சிவத்தைக் கண்டு இன்புறுகின்ற சிவயோகச் செல்வர்களை, “துரிய நிலை துணிந்தவர்”என்று சிறப்பிக்கின்றார். சிவயோகக் காட்சியின்கண் சிவத்தின் உண்மை நிலையைத் தெளிவுற உணர்ந்திருத்தல் பற்றிச் சிவயோகிகளைத் “துணிந்தவர்” என்று புகழ்கின்றார். துணிதல் - தெளிய வுணர்தல். துரிய நிலையில் சிவதரிசனம் மானதக் கண் கொண்டு காணுதலால் அக் காட்சி நலம் வாயாகிய கருவியால் சொல்ல வாராமை பற்றி, “சொல்லரும் மெய்ப்பொருளே”என்று சொல்லுகின்றார். தூய சிவபோகம் விளைகின்ற நிலையமாதலால் ஞான சபையை, “சுத்த சிவானந்த சபை” என்றும், அதனைக் கண்டு நுகர்ந்து இன்புறும் ஞான சித்தர்களுக்குத் தலைவனாக விளங்குவது பற்றி, “சித்தர் சிகாமணியே” என்றும் விளக்குகின்றார். சிவ பரம்பொருள் எல்லாத் தெய்வங்கட்கும் தலைவனாய்ப் பெருமைக்கு எல்லையாய் விளங்குவது பற்றிச் சிவனை, “பெரிய சிவபதியே” என்று போற்றுகின்றார். எல்லை காண முடியாத சிவத்தின் பெருமையை மெய்யுணர்வுடைய மேலோர் நினைத்து பரவுவதை யன்றி முற்றும் அறிந்து கொள்ள விழையாராக, அறிந்து கொள்ள வேண்டுமென்று முயலுவது பித்தர் செயல் என்றற்கு, “பித்தர்களில் பெரியேன்” என்றும், “பெருமை அறிந்திடவே பேராசைப் படுகின்றேன்” என்றும் பேசுகின்றார். அறிய முடியாத ஒன்றை அறிய ஆசைப் படுவது பித்தர் செயலாம் என்பது பற்றி, “பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்” என்று வடலூர் வள்ளல் தம்மைக் குறிக்கின்றார். மாணிக்கம் முதலிய மணிகள் ஒன்பதனுள் எளிதில் ஆராய்ந்து நலம் கண்டறியப் படுவது நீலமணியாயினும் அதனைத் தானும் கண்டறிந்து கொள்ளும் அறிவு நலம் என்பாலில்லை; அத்தகைய யான் கண்ணில் விளங்கும் கருமணி போன்ற நினது நல்லியல்புகளை அறிய வல்லவனல்லேன் என்பாராய், “கரிய மணித் திறத்தினையும் காண வல்லேன் அல்லேன்; கண்மணியே நின் திறத்தைக் காணுதல் வல்லேனோ” எனக் கூறுகின்றார். திருவருள் ஞானமாகிய அருட் சோதி, அருமையும் பெருமையும் நிறைந்த பொருள் என்றற்கு, “அரிய பெரும் பொருளாம் உன் அருட் சோதி” எனவும், அத் திருவருள் ஞானம் எனக்கு எய்துமாயின் நான் நின் அருள் பெறும் திறத்தை யுணர்ந்து கொள்வேன் என்பாராய், “எனக்கே அளித்தனையேல் அறிந்து கொள்வேன்” எனவும் ஓதுகின்றார். அறிதற் கரியவற்றையும் எளிதில் அறிந்து கொள்ளச் செய்யும் அருட் சோதியை எனது யாக்கை நிலையாமை நோக்கி விரைந்து தந்தருளுக என்பாராய், “அளித்திடுக விரைந்தே” என்று உரைக்கின்றார்.
இதனால், சிவத்தின் பெருமை யறியவும் திருவருள் திறத்தைக் கண்டு கொள்ளவும் இறைவனுடைய அருட் சோதியைத் தந்தருளுக என வடலூர் வள்ளல் சிவபெருமானை வேண்டியவாறாம். (3)
|