பக்கம் எண் :

3816.

     விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
          விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
     மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
          முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
     செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
          சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
     பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
          பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.

உரை:

     சூரியன் உதயம் ஆகாத போது கண்களைப் பரக்கப் பரக்க விழித்து நோக்கினாலும் விழி இமைகள் இளைத்துப் போவதன்றிப் பார்ப்பது ஒன்றும் இல்லையாம்; மொழிகளைத் தொடுத்துத் தொடுத்து அடிக்கடி விரைந்து பாட முயன்றாலும் முன்னவனாகிய நின்னுடைய பெரிய திருவருள் முன் நில்லாவிடில் செழுமையான பொருட் பயன் ஒன்றும் பாட்டில் அமையாது; அருளுருவாகிய உன் திருவுளம் இரங்கி அருளுமானால் ஒருசிறு துரும்பும் படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் செய்ய வல்லவாம்; இது உண்மை; பழித்துப் பேசுவோர் பேசுக; செய்வன வெல்லாம் பசுபதியாகிய நின் திருவருட் செயல்களாம்; என்பால் அருள் கூர்ந்து என்னையும் பாடச் செய்து அதற்குரிய பரிசிலையும் மகிழ்வோடு தந்தருள்க. எ.று.

     சூரியன் உதயமாகாத போது எங்கும் இருள் பரந்து விடுதலால், எத்தனை முறை பரக்கப் பரக்க விழித்து நோக்கினாலும் இருளே விளைவதன்றிப் பொருட்களைப் பார்த்து மகிழ்தல் இல்லையாம்; அதுபோல் சொற்களை ஆராய்ந்து எடுத்துப் பாட்டுக்களை அமைக்க அடுத்தடுத்து விரைந்து முயன்றாலும் இறைவன் திருவருள் துணை இல்லையேல் பொருள் நலம் செறிந்த பாட்டு உருவாகா தென்ற இக்கருத்தை விளக்குவதற்கு, “விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல் விழிகள் விழித்து விழித்து இளைப்பதலால் விளைவொன்றும் இலையே மொழித்திறஞ்செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும் முன்னவ நின் பெருங்கருணை முன்னிடல் இன்று எனிலோ செழித்துறு நற்பயன் எதுவோ” என்று கூறுகின்றார். இருட் பொழுதில் கண்களைப் பரக்க விழித்து விழித்துப் பலகாலும் இமைத்து நோக்கினாலும் இமைகள் சோர்ந்து போவதன்றிப் பார்த்து அறிதலாகிய பயன் ஒன்றும் உண்டாகாது; அதனை விழிகள் விழித்து விழித்து இமைப்பதல்லால் பயனொன்றும் இல்லையாம் என்பதை வற்புறுத்தற்கு, “விழிகள் விழித்து இளைப்பதல்லால் விளைவொன்றும் இல்லை” என்று விளம்புகின்றார். மொழித் திறஞ் செய்வதாவது சொல்லும் பொருளும் சிறக்குமாறு வழுச் சொல் இல்லாமல் கலைந்து தூய இனிய சொற்களை அமைத்து ஓதுதல். பலகாலும் பாடப் பாடப் பாட்டுக்கள் உருவாவது இயல்பாதலால், “அடிக்கடி முடுகி முயன்றாலும்” என்றும், நான் செய்யும் முயற்சிகள் அத்தனையும் நின் திருவருள் துணை யில்லா விடில் பாட்டுக்குச் செழுமை தரும் நற்பொருட் பயன் எய்தாது என்பாராய், “நின் பெருங் கருணை முன்னிடல் இன்று எனிலோ செழித்துறும் நற்பயன் எதுவோ” என்றும் இயம்புகின்றார். முன்னவன் - முதல்வன்; முற்பட நினைக்கத் தக்கவன். பெருங் கருணை முன்னிடலாவது - பெருமை பொருந்திய நின்னுடைய திருவருள் முன்னின்று உதவுதல். பாட்டுக்குச் செழுமையும் வனப்பும் பொருளின்பமும் அமைந்தாலன்றி அது பயனுடைய பாட்டாகாதாதலால், “செழித்துறு நற்பயன் எதுவோ” என்று தெரிவிக்கின்றார். திருவருட்டுணையின் வரம்பி லாற்றலை யுணர்த்துதற்கு, “திருவுளந்தான் இரங்கில் சிறு துரும்போர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியம்” என்று செப்புகின்றார். சிறு துரும்பு என்றவிடத்துச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. ஐந்தொழில்களாவன : படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல் என்ற ஐந்துமாம். பழித்துரைப்பார் - குற்றம் கூறுவோர். “குற்றமே தெரிவார் குறுமாமுனி சொற்ற பாவினும் ஓர் குறை சொல்குவர்” (கந்தபு) என்பதனால் பழித்துரைப்பார் உரைக்க எனப் பகர்கின்றார். உலகில் உயிர் வகைகள் செய்வன யாவும் இறைவன் திருவருள் இயக்கமே என்பது எல்லா ஆகமங்களும் ஒப்ப உரைக்கும் உரையாதல் பற்றி, “எலாம் பசுபதி நின் செயலே” என்று கூறுகின்றார். அதனால் நான் பாடுவதும், பாட்டுக்குப் பரிசு பெறுவதும் நினது திருவருள் இயக்கமே என்பாராய், “பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்தருளே” என்றும், தன்னைப் பாடுவார் பாடக் கேட்டுப் பரிசு தருவது அருள் நெறியாதலால், “எனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்தருளே” என்றும் பராவுகின்றார்.

     இதனால், இறைவன் திருவருட்டுணையின்றிப் பாடுவதும் பாடற் பரிசு பெறுவதும் இல்லையாம் என்பது தெளிவித்தவாறாம்.

     (6)