பக்கம் எண் :

3819.

     கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
          கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
     சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
          திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
     விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
          விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
     தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
          சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.

உரை:

     முறுக்கவிழ்ந்து மலர்ந்த தாமரை மலர்போல என் மனம் மலர்ந்து, விரிந்து நின் திருவருளையே நினைக்கின்றேனன்றி வேறு எதனையும் நினைக்கின்றேன் இல்லை; நல்லொழுக்கமுடைய ஞானிகளின் உள்ளத்தில் விளங்குகின்ற சிவமாகிய பதிப்பொருளே! என் கருத்து நின்னுடைய திருவுள்ளம் அறிந்ததாதலால் நான் வேறு சொல்லுவது என்னையோ? இவ்வுலகில் விட்ட குறை தொட்ட குறையாகிய இரண்டையும் நிறைத்துக் கொண்டேன் ஆதலால் என்பால் நீ விரைந்து வந்து திருவருள் சோதியை வழங்குதற்குரிய தருணமும் வந்து விட்டது என்பதை நான் தெளிய வுணர்ந்து சொல்லுகின்றேன்; அதனையும் நீ என்னுள் இருந்து உணர்த்த உணர்ந்து சொல்லுவதன்றி என் அறிவால் சொல்லத் தக்கவனல்லேன். எ.று.

     அரும்பி மலர்ந்த தாமரைப் பூவை, “கட்டவிழ்ந்த கமலம்” எனக் குறிக்கின்றார். தாமரை மலர்ந்து விரிவது போலத் தனது மனத் தாமரையும் மலர்ந்து இறைவனையே நினைக்கின்றமை உணர்த்துவாராய், “கருத்தவிழ்ந்து நினையே கருதுகிறேன்” எனவும், வேறு எண்ணங்கள் என் நெஞ்சின்கண் இல்லை; இது நின் திருவுள்ளம் நன்கறிந்தது என்றற்கு, “இதுதான் நினது திருவுளமே அறிந்தது” எனவும் விளம்புகின்றார். நின் திருவுளம் நன்கறிந்த ஒன்றை மீளவும் எடுத்தோதுவது வேண்டா கூறலாம் என வற்புறுத்தற்கு, “நான் செப்புதல் என்” என்று மொழிகின்றார். சிட்டர் - இறைவனின் பொய்தீர் ஒழுக்க நெறி நின்ற சிவஞானிகள். அவரது திருவுள்ளத்தையே கோயிலாகக் கொண்டு அதன்கண் எழுந்தருளுவது பற்றி, “சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே” என்று புகழ்கின்றார். விட்ட குறை - முன்னைப் பிறப்பில் செய்த வினைப் பயனில் நுகரப் படாது இருக்கும் பயன். தொட்ட குறை - மேற்கொண்ட வினையைத் தொடங்கி அதனை முடிக்காமலும் அதன் பயனை நுகராமலும் இருக்கும் நிலை. இருவகை வினைப் பயன்களையும் நுகர்ந்து கழித்து வினைத் தொடர்பினின்றும் நீங்கி யிருக்கும் தமது நிலையைத் தெரிவித்தற்கு, “புவி மேல் விட்ட குறை தொட்ட குறை இரண்டும் நிறைந்தனன்” என்று கூறுகின்றார். “வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினை தீரினன்றி விளையாவாம்” (சிவஞான போதம்) என்று சான்றோர் கூறுதலால், வினைத் தொடர்பறுத்த நிலையை எடுத்துரைக்கின்றார். வினையின் நீங்கிய தமது நிலை நோக்கி அருள் ஞானம் வழங்குதல் வேண்டும் என்று வற்புறுத்தற்கு, “நீ விரைந்து வந்து அருட் சோதி புரிந்தருளும் தருணம் தொட்டது” என்று சொல்லுகிறார். வினைத் தொடர்பறுத்தமை ஞான நாட்டம் உடையார்க்கன்றி விளங்காதாதலின், “நான் துணிந்து உரைப்பேன்” என்றும், அங்ஙனம் உரைத்தற்கு இன்றியமையாத உணர்வு நீ யுணர்த்த என் உள்ளத்தில் உளதாயது என்பாராய், “நீ உணர்த்த உணர்ந்து சொல்லுவதல்லால் என் அறிவால் சொல்லவல்லேன் அன்றே” என்றும் பகர்கின்றார்.

     இதனால், விட்ட குறை தொட்ட குறையாகி வினைத் தொடர்பிலிருந்து நீங்கிச் சிவஞானப் பேற்றுக்குச் சமைந்திருக்கின்றமை தெரிவித்தவாறாம்.

     (9)