3820. காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலம்இடப் பார்த்தேன்
கோயிலின்மேல் வாயிலிலே குறைகள்எலாம் தவிர்ந்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.
உரை: ஐம்புல நுகர்ச்சிக்குரிய காட்டைக் கடந்து ஞானப் பேற்றுக்குரிய சிவம் உறையும் நாட்டை யடைந்து அங்குள்ள சிவ மாநகராகிய கடிநகரினைச் சூழ்ந்து விளங்கும் அழகிய மதில்களினுடைய இனிய காட்சியைக் கண் குளிரக் கண்டேன்; அங்குள்ள கோட்டைகளின் உச்சியிலெல்லாம் கொடி நாட்டி உள்ளே விளங்கும் கோயிலின் மேலை வாயிலில் கோலம் செய்திருப்பதைப் பார்த்தேன்; அதனால் எனக்குள்ள குறைகளெல்லாம் நீங்கின; என்னுடைய கருவி கரணங்கள் யாவும் தன் செயலற்று என் வசமாய் நிற்க யானும் ஞான சித்திகள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டேன்; திருச்சிற்றம்பலம் பொருளாகப் பாட்டு வகை எல்லாம் பாடுகின்றேன்; எனக்குத் திருவருளைத் தருதற்கு இது ஏற்ற தருணம் ஆகுமாதலால் ஞான பலம் கொண்ட என்னுள்ளத்தில் நீ எழுந்தருளி இரண்டறக் கலந்து நிறைந்தருளுவாயாக. எ.று.
கண் காது முதலிய பொறி புலன்களின் ஆசைச் சூழலாகிய உடம்பை, “காடு” என்றும், அதன் வழி நின்ற தாம் அப்பற் றொழித்து விளங்கும் திறத்தை, “காட்டை எலாம் கடந்து விட்டேன்” என்றும், பொறி புலன்களின் கட்டினின்று நீங்கி ஞானப் பேற்றால் சிவலோகக் காட்சி பெற்றமை உணர்த்த, “நாட்டை அடைந்து” என்றும், ஆங்கே விளங்கும் சிவ மாநகரைக் “கடிநகர்” என்றும், அதனைச் சூழ்ந்திருக்கும் மதிலின் அழகிய தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தமை விளங்க, “பொன்மதிற் காட்சி கண் குளிரக் கண்டேன்” என்றும் கூறுகின்றார். சிவலோகமென்றும், அவ்வுலகில் சிவன் எழுந்தருளும் இடம் சிவ மாநகரமென்றும், அங்கே சிவனுறையும் கோயிலைக் கோயில் என்றும் மணிவாசகர் முதலிய பெருமக்கள் திருவாசகத்துள் ஓதுவதறிக. கடிநகர் - காவலை யுடைய நகர்; ஞான வேலி சூழ்ந்த நன்னகர் என்பதுமுண்டு. கோட்டை மதிலின்மேல் கொடிக் கம்பங்கள் நிறுவி அழகு செய்வது பற்றி, “கோட்டை எலாம் கொடி நாட்டி” எனவும், வாயில்களில் பல வகையாகக் கோலமிட்டு அழகு செய்யும் இயல்பு தோன்ற, “கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலமிடப் பார்த்தேன்” எனவும் கூறுகின்றார். சிவ மாநகரின் திருக்கோயில் காட்சி வள்ளற் பெருமானுக்கு மனநிறைவு தந்தமையின் “குறைகள் எலாம் தவிர்ந்தேன்” என்றும், கண் காது முதலிய கருவிகளின் செயலொடுங்கி ஆன்ம அறிவின் வழி ஒன்றி நிற்க, அதன் பயனாக ஞான சித்திகள் எல்லாவற்றையும் தாம் பெற்றுக் கொண்டமை யுணர்த்த, “சேட்டை அற்றுக் கருவி எலாம் என் வசம் நின்றிடவே சித்தி யெலாம் பெற்றேன்” என்றும் செப்புகின்றார். இவ்வாறு கருவி கரணங்கள் தம்வழி நின்ற போது தமது ஆன்ம அறிவு செய்த செயலைத் தெரிவிப்பாராய், “திருச்சிற்றம்பல மேல் பாட்டை எலாம் பாடுகின்றேன்” என்றும் இயம்புகின்றார். சிவஞானப் பேற்றால் தமது திருவுளம் ஞான வலிமை எய்தியது என்றற்கு, “பலம் தரும் என்னுள்ளம்” என்றும், அந்தத் தகுதி சிவம் ஒன்றாய்க் கலந்து நிறைதற்கு ஏற்றதாயிற்று என விளக்குதற்கு, “எனது உளந்தனிலே கலந்து நிறைந்தருளே” என்றும் வேண்டுகின்றார்.
இதனால், வாயிற் காட்சி மானதக் காட்சி இரண்டையும் கடந்து யோகக் காட்சியால் சிவ மாநகரின் சிவக் காட்சி பெற்ற திறத்தை வடலூர் வள்ளல் காட்டியவாறாம். (10)
|