3821. சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளன் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய்
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.
உரை: நெஞ்சமே! அணிமா, மகிமா முதலிய எண்வகைச் சித்திகள் எல்லாவற்றையும் செய்ய வல்ல சிவபெருமானாகிய சித்தன் என் உள்ளத்திற் கலந்து கொண்டான்; இனிச் செத்தவர்களை எழுப்புகின்ற திருநாட்கள் காலத்தால் அடுத்த இன்றே தொடங்கி அழியாத மெய்ந்நிலையை அடைதற்கு ஏற்ற குறிகளும் அடையாளங்களும் ஏற்றவிடத்துப் பொருந்தி அமைகின்றன; ஆகவே நாம் சாவாப் பெருவாழ்வு பெற்று மிக்க பெருமகிழ்ச்சி அடைதல் சத்தியமாகும்; இனி வீணே சந்தேகமுற்று அலைய வேண்டா; இப்போது உரைத்த என் சொற்களைப் பொய்யாத மெய்ம்மொழிகள் எனக் கருதி மகிழ்ச்சியோடு அமைவாயாக; இதுபற்றி நெஞ்சமே, நீ உள்ளம் அஞ்சுதல் வேண்டா. எ.று.
ஒருகால் மதுரையில் எல்லாம் வல்ல சித்தராக எழுந்தருளினானாதலால், அதை நினைவிற் கொண்டு சிவபெருமானை “எல்லாம் வல்ல சித்தன்” என்று குறிக்கின்றார். அணிமா, மகிமா, லகிமா முதலாகச் சித்திகள் எண்வகைப் படுதலின், “சித்தி எல்லாம்” என எடுத்துரைக்கின்றார். சித்தி - செயற்கரிய செயல்கள். அணுவை மலையாக்குதல், மலையை அணுவாக்குதல், சிறியதைப் பெரிதாக்குதல், பெரியதைச் சிறிய தாக்குதல், கூடு விட்டுக் கூடு பாய்தல், பிறர் கண்ணுக்குத் தெரியாமல் உலாவுதல் முதலியன சித்திகள் எனப்படும். இவற்றை எளிதாக எண்ணிய மாத்திரத்தே செய்ய வல்ல பெருமான் என்பதற்காகச் சிவனை, “சித்தி எலாம் வல்ல சிவசித்தன்” என்று சிவபெருமானைச் சிறப்பிக்கின்றார். அப்பெருமான் என் உள்ளம் புகுந்து வேறறக் கலந்து கொண்டானாதலால், இனி யாமும் செயற்கரிய செயல்களைச் செய்யலாம் என்ற துணிவினால், “உளம் கலந்தான்” என்று ஓதுகின்றார். இத்தகைய நலத்தால் நாமும் செத்தாரை எழுப்பலாம்; அதனைச் செய்தற் கேற்ற நாட்களும் இன்று தொடங்கி நம்பாற் பொருந்துகின்றன என்பாராய், “செத்தாரை எழுப்புகின்ற திருநாட்கள் அடுத்த இத்தினமே தொடங்கி இசைந்து இயல்கின்றன” என்றும், அது செத்துப் பிறக்கின்ற அழிவு நிலையை மாற்றி அழியாத பெருநிலையை அடைதற்கு ஏற்ற குறியாகும் என்பதற்கு, “அழியாத நிலை அடைதற்கு ஏற்ற குறி” என்றும், அது காலமும் இடமும் வாய்த்த பொழுது கைகூடும் எனத் தெளிவித்தற்கு, “ஏற்ற விடத்து இசைந்து இயல்கின்றன” என்றும், அதனால் நாம் நினைத்து இன்பப் பெருவாழ்வு அடைதல் நிச்சயம் என்பாராய், “நாம் பெருவாழ்வில் பெருங் களிப்புற்றிடுதல் சத்தியமே” என்றும் இயம்புகின்றார். யாவர் யாது கூறக் கேட்பினும் சந்தேகித்துப் பின்பு தெளிதல் மனத்தின் இயல்பாதலால், “சாற்றிய என் மொழியைச் சந்தேகித்து அலையாதே” எனவும், தமது மொழியைப் பொய்யாத மெய்ம்மை மொழி என்று கொள்க என்பாராய், “சாற்றிய என் மொழியை நித்திய வான்மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய்” எனவும், சந்தேக விபரீதங்களால் அஞ்சி அவலித்தல் வேண்டா வென யாப்புறுத்தற்கு, “நெஞ்சே நீ அஞ்சேல் உள்ளஞ்சேல் அஞ்சேலே” எனவும் கூறுகின்றார். செத்தாரை எழுப்புதலாவது உடம்பிலிருந்து உயிர் நீங்கப் பெற்றவரை மீள உயிர் பெற்று எழச் செய்தல் என்று பொதுவாகப் பொருள் கொள்ளப்படினும், “எவரும் தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே” (சதகம்) என்றும், “செத்தே போனால் சிறியாரோ” (கோ. மூத்த) என்றும் பெரியோர் வழங்குவது போன்று நல்லுணர்வு இழத்தல் என்று பொருள் கொள்வதும் உண்டு. நல்லது தேரும் உணர்விழந்து அலமருவோர்க்கு நல்லுணர்வு தந்து உண்மை ஞானத்தால் பிறவாப் பெருநிலை எய்துவித்தற் கேற்ற வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன என்ற கருத்தமைய இது கூறப்படுகின்றது என உரைப்பதும் உண்டு.
இதனால், செத்தாரை எழுப்புதற்கு அமைந்த காலமும் இடமும் வாய்த்துள்ளன என நெஞ்சுக்கு வலியுறுத்தவாறாம். (11)
|