34. அனுபோக நிலையம்
அஃதாவது, சிவஞானத்தில் தோய்ந்து, கலந்து, சிவானந்தத்தைப் பெறுதற்குள்ள ஆர்வ மிகுதியை எடுத்துரைப்பதாகும்.
இந்தச் சிவஞான அனுபவத்தைப் பெறுதற் கெழுந்த வேட்கையை இப்பகுதியில் பாட்டுத் தோறும் வடலூர் வள்ளல் எடுத்துரைக்கின்றார்.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3822. இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை
எண்ணினும் ஐயவோ மயங்கிப்
பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும்
பரதவிப் பதைஅறிந் திலையோ
தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
தனிநடம் புரிதனித் தலைவா
கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம்
கலந்தருள் கலந்தருள் எனையே.
உரை: தனித் தோங்குகின்ற ஞானமாகிய பேரம்பலத்தில் இன்பம் பெருகும் ஒப்பற்ற நடனத்தைப் புரிகின்ற ஒப்பற்ற தலைவனே! உன்னைச் சிறிது பொழுதும் இனிமேல் நான் பிரிந்திருக்க மாட்டேன்; பிரிவென்ப தொன்று உண்டென எண்ணினாலும் ஐயனே, என் அறிவு மயங்கி நடுக்குற்று என் உடம்பும் உயிருள் உலவும் உணர்வும் எல்லாம் வருந்தித் துடிப்பதை நீ அறிந்திலையோ; சிவயோகத்தில் கனிந்து பெருகும் சிவஞான ஆனந்தமாகிய பயனை, எனக்குத் தருதற் பொருட்டு இது தக்க தருணமாதலால் என் உயிருணர்வில் கலந்தருளுவாயாக. எ.று.
சிவஞானம் தலைப்பட்டிருக்கின்ற நான் இனிச் சிறிது போதும் அதனின்றும் பிரிந்திருக்க மாட்டேன்; பிரிவை நினைப்பினும் பிரிந்திருக்க மாட்டேன் என்பாராய், “இனிப் பிரிந்து இறையும் இருக்கலேன்” என எடுத்து மொழிகின்றார். பிரிவை நினைந்த வழித் தமது உடம்பும், உயிரும், உள்ளுணர்வும் வருந்துகின்ற திறத்தை எடுத்துரைப்பாராய், “பிரிவை எண்ணினும் ஐயவோ மயங்கிப் பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள்ளுணர்வும் பரதவிப்பதை அறிந்திலையோ” என வுரைக்கின்றார். பனிப்பு - நடுக்கம். பிரிவை எண்ணுகிற போது உடம்பில் உண்டாகிற நடுக்கத்தை விளக்குதற்கு, “பனிப்பில் என் உடம்பு” எனப் பகர்கின்றார். இல்லுருபு ஏதுப் பொருளதாகிய இன்னுருபின் பொருட்டு. உள் உணர்வு - உணர்வு வடிவாகிய உயிரின்கண் உட்கலந்து ஒளிரும் உணர்வு. பரதவித்தல் - வருந்துதல். ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவமாகிய தத்துவ எல்லைகளுக்கு அப்பால் விளங்குகின்ற பரவெளியை, “தனிப்படு ஞான வெளி” என்றும், அவ்வெளியின்கண் ஞான இன்ப நடனம் புரிகின்றான் சிவபெருமான் என்பது பற்றி, “ஞான வெளியிலே இன்பத் தனிநடம் புரி தனித் தலைவா” என்றும் இயம்புகின்றார். ஞான நடனம் நிகழுமிடத்து கூத்தப்பெருமான் ஒருவனையன்றி வேறு எத்தகைய தேவரும் முனிவரும் இல்லாமை விளங்க, “தனித் தலைவா” என்று சிறப்பித் துரைக்கின்றார். சிவயோகம் முதிர்ந்த வழி எய்துகின்ற சிவஞான நலத்தை, “கனிப் பயன்” என்று குறித்து, அதனை நான் பெறுதற்கு இது தக்க தருணமாதலால் என் உணர்வினுள் கலந்து நல்குதல் வேண்டுமென விழைகின்றாராதலால், “கனிப் பயன் தருதற்கு இது தகு தருணம் கலந்தருள் கலந்தருள் எனையே” என்று முறையிடுகின்றார். அடுக்கு விரைவு தோன்ற வருகிறது.
இதனால், சிவயோக ஞானானந்தம் பெறுதற்கு எழுந்த விழைவு மிகுதி புலப்படுத்தவாறாம். (1)
|