383. அரைமதிக் குறழும் ஒண்ணுதல் வாட்கண்
அலர்முலை யணங்கனார் அல்குல்
யுரைமதித் துழலும் மனத்தினை மீட்டுன்
பொன்னடிக் காக்குநாள் உளதோ
பரைமதித் திடஞ்சேர் பராபரற் கருமைப்
பாலனே வேலுடை யவனே
விரைமதித் தோங்கும் மலர்ப்பொழில் தணிகை
வெற்பினி லொளிருமெய் விளக்கே.
உரை: பரையாகிய உமாதேவி நன்கு எண்ணி இடப்பாகத்தில் பொருந்தியுள்ள பராபரனாகிய சிவனுக்கு அருமை வாய்ந்த புதல்வனே, வேற்படையைக் கையில் உடையவனே, மணம்மிகுந்து பெருகும் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த தணிகை மலையில் விளங்குகின்ற மெய்ம்மையான விளக்கே, பிறைமதி போலும் ஒள்ளிய நெற்றியையும் ஒளி பொருந்திய கண்களையும் பருத்த கொங்கைகளையு முடைய மகளிரின் அல்குலாகிய குழியினை விரும்பி அலையும் மனத்தை மீட்டு உன்னுடைய அழகிய திருவடியின்கண் நிறுத்தும் நாள் எனக்கு உண்டாகுமா? எ.று.
பரை, பரம் என்பதன் பெண்பால்; இங்கு உமாதேவியைக் குறிக்கிறது; சிவனுடைய இடப்பாகத்திலிருக்கும் தேவியைக் குறிக்கும். மேல்கீழ் என வழங்கும் பொருள் தோறும் கலந்து நிற்றலால் சிவனைப் பராபரம் என்கின்றார். ஞான மூர்த்தியாக விளங்குதலால் முருகனை, “அருமைப் பாலனே” என்று புகழ்கின்றார். விரை - நறுமணம். மலை மேலிட்ட விளக்கு எத்திசையும் தோன்ற விளங்குவது போலத் தத்துவமாகிய மலை யுச்சியில் ஞான வொளி கொண்டு எப்பொருளிலும் கலந்து விளங்குவதால், “ஒளிரும் மெய் விளக்கே” என்று விளம்புகிறார். அரைமதி - பிறைத் திங்கள். உறழ்தல் - ஒத்தல். ஒண்ணுதல் - ஒளி பொருந்திய நெற்றி. அடி பரந்து மார்பகம் எங்கும் விரிந்து நிற்பதால் பருத்த கொங்கைகளை, “அலர்முலை” என்று குறிக்கின்றார். அணங்கனார் - மகளிர். கண்டார் உள்ளத்தில் காம விச்சையைத் தோற்றுவித்து வருத்துவதால் மகளிரை, “அணங்கனார்” என்று இயம்புகிறார். அணங்குதல் - வருத்துதல். புரை, ஈண்டுக் குழி யென்னும் பொருளில் வந்தது.
இதனாலும் மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தவாறாம். (4)
|