35. சிவபோக நிலை
அஃதாவது, சிவஞானத்தால் எய்துதற்குரிய சிவபோகத்தைப் பெறும் வாயிலாகிய சிவயோக முயற்சியை எடுத்தோதுவதாம். சிவயோகச் சிவஞானப் பேற்றிற்குத் தடையாக இருக்கும் உலகியல் மாயையை நீக்கி ஞான நேய நிலையின்கண் செலுத்துவதாகலின் அதனைக் கதவாக உருவகம் செய்து அதனைத் திறந்து அருளுமாறு இதன்கண் வரும் பாட்டுத் தோறும் வடலூர் வள்ளல் எடுத்தோதுகின்றார். சிவஞானமாகிய நிலையத்தின்கண் புகுந்தாலன்றிச் சிவஞான போக நுகர்ச்சி எய்தாது என்பது கருத்து.
நேரிசை வெண்பா 3832. மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே
பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய
நவநேய மாக்கும் நடராச னேயெஞ்
சிவனே கதவைத் திற.
உரை: எங்கள் சிவபெருமானே! நித்தியமும் புதுமையுமுடைய நேயமாகிய சிவயோகப் பயனை எய்த அருளும் கூத்தப் பெருமானே! திருவருள் ஞானத்தைப் பெறுதற்குத் தடையாகும் உலகியல் மாயை என்னும் கதவைத் திறந்து யோக நெறியில் துவாத சாந்தத்தில் தோன்றும் ஞான வமுத சந்திரனிடத்து ஒழுகும் ஞான அமுதத்தை நிரம்ப உண்டு சிவலோகத்தில் சிவஞான அருளரசு பண்ணி இன்புற அருளுவாயாக. எ.று.
நித்திய நவநேயமாவது அழிவில்லதாய் சிவஞானத்தால் உணரப்படும் சிவமாகிய நேயப் பொருள். நித்தியம் நிதியம் என வந்தது. நிதிய நவநேயம் எனவே கொண்டு திருவருள் ஞானச் செல்வமாகிய சிவஞான நேயம் எனினும் அமையும். நுகருந் தொறும் நுகருந் தொறும் புத்தின்பம் தருவதாகலின் சிவமாகிய நேயத்தை “நவ நேயம்” என்று கூறுகின்றார். மதி மண்டலம் என்பது யோக நெறியில் மூலாதாரம் முதலாக வுள்ள ஆதாரம் ஆறினுக்கும் மேலதாகிய துவாத சாந்தத்தில் தோன்றுகின்ற ஞான சந்திரன். யோகியர் சந்திரனிடத்து அமுதம் ஒழுகப் பெற்று அதனை ஞான நாட்டமே வாயாக உண்டு இன்புறுவர் என்பவாதலின், “மதி மண்டலத்து அமுதம் வாயார உண்டு” எனவும், ஆங்கு அவர் பெறும் பயன் சிவலோக இன்ப அரச போகம் என்று விளக்குதற்கு, “பதி மண்டலத்து அரசு பண்ண” எனவும், அவ்வின்பப் பேற்றுக்கு உலகியல் மயக்கம் தடையாதல் பற்றி அதனைக் கதவு எனவும் உருவகம் செய்து, “கதவைத் திற” எனவும் இயம்புகின்றார். இறைவன் யோகியர்க்கு அருளும் திறத்தை “ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு, இடரான கெடுப்பன அஞ்செழுத்துமே” என்று ஞானசம்பந்தர் உரைப்பது காண்க.
இதனால், சிவயோக நெறியில் மதி மண்டலத் தமுதம் உண்டு சிவ போகத்தை நுகரும் திறம் தெரிவித்தவாறாம். (1)
|