384. விளக்குறழ் மணிப்பூண் மேலணிந் தோங்கி
விம்முறும் இளமுலை மடவார்
களக்கினில் ஆழ்ந்த மனத்தினை மீட்டுன்
கழலடிக் காக்கும் நாள்உளதோ
அளக்கருங் கருணை வாரியே ஞான
அமுதமே ஆனந்தப் பெருக்கே
கிளக்கரும் புகழ்கொள் தணிகையம் பொருப்பிற்
கிளர்ந்தருள் புரியுமென் கிளையே.
உரை: அளக்க முடியாத கருணைக் கடலே, ஞானமாகிய அமுதமே, ஆனந்தமாகிய வெள்ளமே, சொல்லுதற்கரிய புகழ் கொண்ட தணிகை மலையில் எழுந்தருளி எவ்வுயிர்க்கும் அருள் புரியும் (எனக்கு) உறவானவனே, விளக்குப் போல் ஒளிவிடும் மணிகள் இழைத்த ஆபரணத்தை மேலே அணிந்து கொண்டு பருத்து ஓங்கும் இளம் கொங்கைகளையுடைய மகளிரது போகவுறுப்பில் பதிந்துள்ள என் மனத்தை மீட்டு உனது திருவடிக்கு உரியதாக்கும் நாள் எனக்கு எய்துமோ, எ. று.
அளவிடற்காகாத அருட் கடலாக இருப்பதால், “அளக்கருங் கருணைவாரியே” என்று போற்றுகிறார். வாரி - கடல். கடலிடத்தெழும் அமுதம் போல முருகப் பெருமானிடத்து ஞானவுரை எழுதலால், “ஞான அமுதமே” என்றும், அதனை உண்ட வழிப் பெருகும் இன்பத்தை, “ஆனந்தப் பெருக்கே” என்றும் இசைக்கின்றார். கிளத்தல் - சொல்லுதல். தணிகை மலையில் எழுந்தருளித் தன்னைப் பரவும் எல்லா உயிர்க்கும் இன்பம் செய்தலால், “தணிகையம் பொருப்பில் கிளர்ந்தருள் புரியும்” என்றும், தனக்குள்ளும் எழுந்தருளுவது பற்றி “என் கிளையே” என்றும் உரைக்கின்றார். மகளிர் மார்பில் மணிகள் இழைத்த மாலைகள் கிடந்து அழகு செய்வதால் அவற்றை விதந்து, “விளங்குறழ் மணிப்பூண் மேல் அணிந்து ஓங்கி விம்முறும் இளமுலை மடவார்” என்கிறார். விம்முதல் - பெருத்தல். மடவார் - மகளிர். களக்கு - குற்றம்; இது கலக்கம் எனவும் வழங்கும்; ஈண்டு இது பெண்மை யுறுப்பைக் குறிகின்றது. கழல் அடி, வீரகண்டை அணிந்த திருவடி மேல் நின்றது.
இதனால் மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தவாறாம். (5)
|