3841. சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம்
மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய
ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான
தேகா கதவைத் திற.
உரை: சொல்லுதற் கரிய குருபரம்பொருளாகிய ஒருவனே! உலகுயிர்கள் தோறும் நிறைந்து பலவாய் விளங்குபவனே! அழகிய திருவம்பலத்தின்கண் எழுந்தருளும் ஞானமே யுருவாகிய சிவனே! சோதியாகிய மலை போல் விளங்குகின்ற துவாத சாந்தமாகிய வீட்டில் பெறப்படும் தூய ஞான அமுதத்தை மண்ணுலகில் இருந்து கொண்டே நான் உண்டற்கு விரும்பினேனாதலால் அதற்குத் துணையாக உனது திருவருளாகிய கதவைத் திறந்தருளுக. எ.று.
உயிர் உணர்வுக்கு எட்டாத ஒருபெரும் பரம்பொருளாதலால் சிவத்தை, “ஓதரிய ஏகா” எனவும், எண்ணிறந்த உயிர்கள் தோறும் உயிர்க்குயிராய் விரிந்து நிறைந்து நிலவுவது பற்றிச் சிவனை, “அனேகா” எனவும் உரைக்கின்றார். காணும் தொறும் தனது பேரழகால் காணும் உயிர்கட்குக் காட்சி யின்பம் நல்குதலின், “எழிற் பொதுவில் வாழ் ஞான தேகா” என்றும் பாராட்டுகிறார். யோக ஞானப் பேரின்ப நுகர்ச்சிக்குத் திருவருள் இன்றியமையாதாதலால் திருவருள் நல்குக என்றற்கு, “கதவைத் திற” என்று கட்டுரைக்கின்றார்.
இதனால், யோக ஞான வின்பத்தைப் பெறுவது குறித்து வடலூர் வள்ளல் கொண்ட வேட்கை மிகுதி விளம்பியவாறாம். (10)
|