36. பெற்ற பேற்றினை வியத்தல்
அஃதாவது, தாம் நாளும் முயன்று இறைவனை நினைந்து நினைந்து பரவித் தாம் பெற்ற திருவருள் ஞானப் பேற்றினைப் பலவாறாக வியந்து எடுத்துரைத்தல். இப்பகுதி யாவரும் பாராயணம் செய்தற் குரியதாதலின் இதன்கண் வரும் பத்துப் பாட்டுக்களும் அந்தாதியாக அமைந்துள்ளன.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 3842. சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே
திகழ்தனித் தந்தையே நின்பால்
சேரிடம் அறிந்தே சேர்ந்தனன் கருணை
செய்தருள் செய்திடத் தாழ்க்கில்
யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன்
யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
போரிட முடியா தினித்துய ரொடுநான்
பொறுக்கலேன் அருள்கஇப் போதே.
உரை: சிறப்பு நிலைபெற்ற ஒப்பில்லாத திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற தனிப் பெரும் தந்தையே! சேர்தற்குரிய இடம் நின் திருவடி என்பதைத் தெளிய அறிந்து அதனை அடைந்துள்ளேன்; உனது திருவருளை நீ எனக்குச் செய்தற்குத் தாமதிப்பாயாயின் நான் வேறே யாரிடம் செல்வேன்; யாரைத் துணையாகக் கொள்வேன்; யாவரிடத்து என் குறையைச் சொல்லுவேன்; உலகியல் நல்கும் துன்பத்தோடு இனியும் நான் போர் செய்து வருந்த முடியாது; அத்துயரத்தை நான் தாங்கவும் முடியாதாகையால் எனக்கு உனது திருவருள் நலத்தைத் தந்தருளுவாயாக. எ.று.
பன்னெடுங் காலமாகப் புகழ்நிலை பெற்ற இடமாதலால் இறைவனுடைய அம்பலத்தை, “சீரிடம் பெறும் ஓர் திருச்சிற்றம்பலம்” என்றும், அதனை அடைந்தார்க்கு இனிய காட்சி தந்து ஞானம் தருவது பற்றி, “திருச்சிற்றம்பலத்தே திகழ் தனித் தந்தையே” என்றும் போற்றுகின்றார். உலகில் இறைவனுடைய திருவருள் பெறுதற்கேற்ற இடம் திருச்சிற்றம்பலம் என்று தெளிந்து உன் திருமுன் அடைந்துள்ளேன்; ஆதலால் உனக்கு எனது திருவருள் ஞானத்தை இப்போதே தருதல் வேண்டும் என்பார், “நின்பால் சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்” என்றும், “கருணை செய்தருள்” என்றும் வேண்டுகின்றார். கருணையாகிய உனது திருவருள் எனக்கு அருளுவதற்கு நீ கால தாமதம் செய்வாயானால் நின்னை ஒழிய அருளுருவாகிய புகலிடம் வேறு யாருமில்லை என்பாராய், “யாரிடம் புகுவேன்” எனவும், திருவருளை நல்கி உய்தி பெறுதற்கு எனக்குத் துணையாவார் வேறு யாவருமில்லை என்றற்கு, “யார் துணை என்பேன்” எனவும், நின்னைத் தவிர வேறு யாவர்பால் சென்று என் குறையை எடுத்துரைப்பேன் என்பாராய், “யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்” எனவும், கணந்தோறும் இவ்வுலகியல் துன்பம் தோன்றி என்னை அலைப்பதாலும் யானும் என்னால் இயன்ற அளவு அதனைத் தடுப்பதற்கு முயன்றும் மாட்டாமையால் வருந்துகின்றேன் என உரைக்கலுற்று, “இனித் துயரொடு நான் போரிட முடியாது” எனவும், அத்துயர் மிகுதியைத் தாங்க வியலாதவனாக இருக்கிறேன் என்பாராய், “நான் பொறுக்கலேன்” எனவும், உனது திருவருள் துணையைச் செய்தருள்க என வேண்டுவாராய், “அருள்க இப்போதே” எனவும் விண்ணப்பிக்கின்றார்.
இதனால், தம்மைத் தாக்குகின்ற உலகியற் றுன்பத்தினின்றும் நீங்குதற்குத் துணையும் வன்மையும் நல்குவது இறைவன் திருவருள் எனத் தெளிந்து பெறும் நெறியும் இடரும் அறிந்து அடைந்தமை தெளிவித்தவாறாம். (1)
|