3843. போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ
புரிந்திடத் தாழ்த்தியேல் ஐயோ
யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன்
யார்க்கெடுத் தென்குறை இசைப்பேன்
தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத்
திருவுளத் தடைத்திடு வாயேல்
ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ
என்னுயிர்த் தந்தைநீ அலையோ.
உரை: காலமோ விரைந்து கழிந்து கொண்டிருக்கிறது; அது தெரிந்து நீ எனக்கு உனது திருவருளை நல்குவதற்குக் கால தாமதம் செய்வாயாயின், ஐயகோ யான் யாது செய்வேன்; அது குறித்து வேறு யாரிடம் செல்வேன்; எனது திருவருள் ஞானமில்லாத குறையை யாவரிடம் எடுத்துரைப்பேன்; அதனைப் பெறுதற்குத் தடையாக யான் குற்றம் பல செய்துள்ளேன் என்றாலும் நீ அதனை நினது திருவுள்ளத்தில் கொள்வாயாயின் இச்செயல் அருளுருக் கொண்ட தந்தையாகிய உன்னுடைய முறைமைக்கு அழகாகுமா? என் உயிர்க் கினிய தந்தை நீ அல்லவா? அருள் புரிக. எ.று.
கணப் பொழுதும் நில்லாமல் கழிவது காலத்தில் இயல்பாதலாலும் கழிந்த காலம் மீளப் பெறுதற்கு இயலாதாதலாலும், “போதுதான் விரைந்து போகின்றது” என்று புகழ்கின்றார். இக்காலத்தின் அருமை நோக்கி நீ அருள் புரிவது முறையாகும்; அது நோக்காது நீ தாமதிப்பாயாயின் என் புகலிட மின்றியும் என் குறையைக் கேட்டு ஆதரிப்பார் இன்றியும் எண்ணி வருந்துகிறேன் என்பாராய், “யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன் யார்க்கு எடுத்து என் குறை இசைப்பேன்” என மொழிகின்றார். யான் செய்த குற்றங்கள் காரணமாக நீ எனக்குத் திருவருள் நல்கத் தாமதிக்கின்றாய் எனில் என் குற்றங்களைப் பொருளாகக் கருதித் தாமதித்தல் அருளே திருவுருவாக வுடைய உனக்குப் பெருமையாகாது; அருள் தந்தையாகிய உனக்கு அது அழகுமாகாது என முறையிடுவாராய், “தீதுதான் புரிந்தேன் எனினும் நீ அதனைத் திருவுளத்தில் அடைத்திடுவாயேல் ஈதுதான் தந்தை மரபினுக்கு அழகோ” எனவும், நீ எனக்கு என் உயிர்க் கினிய அருள் நெறித் தந்தையாதலால் நீ அதனை மறந்தனையோ என்பாராய், “என் உயிர்த் தந்தை நீ அலையோ” என்று இயம்புகின்றார்.
இதனால், திருவருட் பேற்றுக்குத் தடையாகும் குற்றங்கள் செய்திருப்பினும் என்னைப் பொறுத் தருளுக என்று வேண்டியவாறாம் (2)
|